ETV Bharat / state

தமிழகமே அனைத்திலும் முதலிடம்.. மத்திய அரசின் ஆய்வை சுட்டிக் காட்டிய திமுக! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 3:53 PM IST

DMK: அனைத்து துறைகளிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளதாக, மத்திய அரசு வெளியிட்ட ஆய்வை சுட்டிக் காட்டி திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

DMK
திமுக

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுவதால், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அடிக்கடி தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, திமுக தற்போது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், "நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் என்னும் 'பெரிய பதவியில்' உள்ளவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு தெரியாமல் சில நாள்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வாய் ஜாலம் காட்டினார்.

அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள், தமிழ்நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன.

தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் – புரிந்தும் புரியாமல் – இழித்தும், பழித்தும் திமுகவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய 'பெரிய பதவியில்' உள்ளவர்களுக்கு, மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

ஜவுளித்துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.. ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-23ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை மத்திய அரசின் நிர்யாத் (NIRYAT) நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து, ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர். இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது.

ஆயத்த ஆடைகள் (Readymade Garments) ஏற்றுமதியில்.. 2022-23ஆம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி, வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேச மாநிலமும், மிகவும் பின்தங்கிய நிலையில் மராட்டியம், குஜராத் மாநிலங்கள் உள்ளன.

தோல் பொருட்கள் ஏற்றுமதியில்.. 2022-23ஆம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து மத்திய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இதில், 43.20 சதவிகித தோல் பொருள்களை, அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இப்படி மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகளே, தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் பிரதமரும், மத்திய அரசின் அமைச்சர்களும், பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ள அதிமுகவினரும், தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப் பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பொதுமக்களுக்கு மத்திய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! - MK STALIN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.