ETV Bharat / state

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 9:52 PM IST

Dmk alliance seat sharing:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிப்.9ஆம் தேதி தொகுதி பட்டியலை திமுக வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

dmk
திமுக

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாகக் கூட்டணி பேச்சுவார்த்தை, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நாளை(ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் கூடுகிறது. அதனைத் தொடர்ந்து பிப்.1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ’இந்தியா’ கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக, காங்கிரஸ் கட்சியுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையைக் கடந்த ஜனவரி 28ஆம் நடத்தி முடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 9-ம் தேதி பேச திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நாளை நாடாளுமன்றம் கூட உள்ளது. இதன் காரணமாக திமுக தொகுதிப் பங்கீடு குழு தலைவராக உள்ள டி.ஆர்.பாலு எம்பி உட்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால் பிப்ரவரி 3-ம் தேதிக்குப் பின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி பிப்ரவரி 3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி சுப்பராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கொண்ட குழு திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவுடனும், அன்று மாலை மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச திமுக திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்ய கட்சிக்கும் இம்முறை திமுகவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திருப்புகிறார். அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஆலோசிக்க உள்ளது. அன்றைய தினமே அனைத்து தொகுதிகளின் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு தொகுதி பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி: 6,244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.