ETV Bharat / state

திருச்சியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பறவைகள் பூங்கா - ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - A new Birds park in Trichy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:04 PM IST

New Birds Park In Trichy: திருச்சியில் பறவைகள் பூங்கா அமைக்க நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

work being done to set up a birds park in Trichy
திருச்சியில் அமையவுள்ள பறவைகள் பூங்காவில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் மா.பிரதீப்குமார் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் திருச்சியில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம், சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரமாகவும், தமிழ்நாட்டின் மையப் பகுதியாகவும் இருந்து வருகிறது.

இதனைத் தவிர்த்து, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல், சமயபுரம், மலைக்கோட்டை, முக்கொம்பு அணை, கல்லணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, துறையூர் அருகே உள்ள பச்சமலை, கொல்லிமலை திருச்சி முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

அந்த வகையில் தற்போது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 13.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பங்களிப்புடன் திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திடத் திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பூங்காவில், இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டுப் பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இந்த பறவைகள், விலங்குகளை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த பூங்காவைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீரூற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து, முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள், 7D திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், பறவைகள் பூங்கா அமைக்க நடைபெற்று வரும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு செய்து விரைவாக பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், 60 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் விரைவாக பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெயிலில் சுருண்டு விழுந்த கிளி.. நெல்லை காவலரின் நெகிழ்ச்சி செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.