ETV Bharat / state

வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி ராட்சத முதலை.. கோவை விவசாயிகள் பீதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 2:43 PM IST

Crocodile entered banana plantation: சிறுமுகை அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த ராட்சத முதலை பிடித்த வனத்துறையினர் பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவித்தனர். மேலும், முதல் முறையாக முதலை தோட்டத்துக்குள் வந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Crocodile Entered in banana plantation at Coimbatore
வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி ராட்சத முதலை

வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த 12 அடி ராட்சத முதலை

கோயம்புத்தூர்: சிறுமுகை அடுத்த லிங்காபுரம், மொக்கை மேடு, உலியூர் ஆகிய கிராமங்கள் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளாக உள்ளது. பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வரும் நீர், அணையில் கலக்கும் இடத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் தண்ணீர் அருந்த வருவது வழக்கம். மேலும் மாயாற்றில் இருந்து வரும் நீரும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் கலப்பதால் மாயாற்றில் உள்ள முதலைகள் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது காணப்படும்.

இந்த நிலையில், சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(45). இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல், இன்று காலை தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, வாழை மரங்களுக்கு இடையே மரக்கட்டை போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. அதனை உற்றுப் பார்க்கையில், சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, முதலை குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முதலையைக் கயிறு கட்டிப் பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் கூறுகையில், "கோடைக் காலம் துவங்கும் முன்னரே தற்போது கோடை வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அந்த வகையில் பவானிசாகர் அணியின் நீர்மட்டம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் வெகுவாகச் சரிந்து உள்ளது. இதனால் நீரில் இருக்கும் முதலை அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம்.

தற்போது அந்த முதலையைப் பத்திரமாகப் பிடித்துள்ளோம். சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவித்தோம். மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடுமையாகச் சரிந்து வருவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வனவிலங்குகள் அதிகமாக வெளிவர வாய்ப்பு உள்ளது.

அதனால், தோட்டக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவித்தால்தான் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வன விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட முடியும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கத்தை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இரவு நேரங்களில் தண்ணீர் அருந்த வரும் வன விலங்குகள் விவசாய நிலங்களை அவ்வப்போது சேதப்படுத்தினாலும், முதலைகள் விவசாய நிலங்களுக்குள் வந்ததில்லை. இதுவே முதல் முறை. முதலை இருப்பதை அறியாமல் யாராவது அருகில் சென்றிருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. துரித நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.