ETV Bharat / state

"பாஜகவின் பி டீம் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்" - சிபிஎம் பிரகாஷ் காரத் காட்டம்! - lok sabha elections 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 11:53 AM IST

Prakash Karat in Theni: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் தோல்வியைத் தழுவச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

CPM former general Secretary  Prakash karat
CPM former general Secretary Prakash karat

திண்டுக்கல்: வருகிற ஏப்ரல் 19ஆம் முதல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பயணங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரசார மேடையில் பேசிய அவர், "தற்போது நாம் சந்திக்கவுள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. இது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கக்கூடிய தேர்தல். அதற்காகத்தான் நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை (INDIA Alliance) உருவாக்கியுள்ளது" எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மோடி அரசாங்கம் ஜனநாயக முறைப்படி இந்த தேர்தலைச் சந்திக்க முடியாமல்தான் எதிர்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது. அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகிய நாட்டின் இரண்டு மாநில முதலமைச்சர்களை கைது செய்து, எதிர்கட்சிகளைச் சமாளிக்க திராணியற்ற பாஜக அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது" என குற்றம் சாட்டினார்.

மேலும், "பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் ஆதரவாக கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளது. அதற்கு உதாரணம் தான், தற்போது வெளியான தேர்தல் பத்திர ஊழல். பாஜக பல கார்ப்பரேட் கம்பெனிகளிடம் 8 ஆயிரத்து 252 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது.

பாஜகவுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே இருந்த கள்ள உறவு, இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கொள்கையைத்தான் மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு விளைவாகத்தான், விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய பிரகாஷ் காரத், "கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பாஜக தோல்வி தழுவியது போலத் தான் இந்த முறையும் நடைபெறும். ஆனால், இந்த முறை பாஜகவின் பி - டீமாக இருக்கக்கூடிய அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும், இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து, அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: "அண்ணாமலை கோவை தொகுதியில் வெற்றி பெறப் போவதில்லை; மீண்டும் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார்" - நடிகை காயத்ரி ரகுராம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.