ETV Bharat / state

பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும்.. சிபிஎம் பாலகிருஷ்ணன் சவால்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 5:19 PM IST

CPI (M): தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வரலாற்று வெற்றியைப் பெறும் எனவும், பாஜக தேசிய தலைவர்கள் தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

CPI (M)
சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி

சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம், ஓசூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் பாஜக வேரூன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஆளும்கட்சி நாங்கள் என்கிற வகையில் நாடகமாடி வருகிறார்கள். அநாகரிகமாக விமர்சிக்ககூடிய தலைவராக, நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

மோடி வந்து சென்றால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிடும் என நினைக்கிறார்கள். தைரியம் இருந்தால், அகில இந்திய பாஜக தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும். நிச்சயமாக தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும்.

எனவே, திமுக தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத வெற்றி அடையும். கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக ஜெயித்தது. ஆனால், இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது என அறுதியிட்டுக் கூறுகிறேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்தது. விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிவடைய உள்ளது. திமுக, கூட்டணி தொடர்பான தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடிக்கும். கூட்டணியில் எவ்வித சச்சரவும், சலசலப்பும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது.

கர்நாடகாவிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும். காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவோம், நிதி ஒதுக்கீடு செய்கிறோம் எனப் பேசுவது சரியில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை உதாசினப்படுத்தும் போக்கு வேண்டாம்.

தமிழக அரசின் அனுமதியின்றி, மேகதாதுவில் எந்த பணியையும் தொடங்க முடியாது. அதேபோல், ஆந்திர மாநிலம் பாலாற்றில் தடுப்பணையைக் கட்ட திட்டத்தை தீட்டி வருகிறது. இதையும் தமிழக அரசு செயல்படுத்தவிடாது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருக்கும் இந்த மாநிலங்களில் மோத விடுகின்ற அரசியல் அணுகுமுறை உருவாகுவது பொருத்தமில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வர்த்தக கையேடு வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.