ETV Bharat / state

ஹிஜாவு மோசடி; தலைமறைவாக இருந்த தம்பதி கேரளாவில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 3:13 PM IST

Hijau Scam: ஹிஜாவு மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியை கேரளாவில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டில் ஹிஜாவு டிரேடிங் நிறுவனம் பொதுமக்களிடம் மாதம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கட்டினால், மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1,620 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் சௌந்தரராஜன், அவரது மகன் அலெக்சாண்டர் மற்றும் மேலும் 12 இயக்குனர்கள், 13 கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு நவம்பரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிஜாவு மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 20 நபர்களை கைது செய்து, அவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மோசடி விவகாரத்தில் ஹிஜாவு நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டரை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார்.

இதையடுத்து, இன்டர்போல் போலீசார் உதவி உடன், அவரை மீண்டும் இந்தியா அழைத்து வர கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஹிஜாவு மோசடி விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாகத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரீஜா (46) மற்றும் அவரது கணவர் மதுசூதனன் (53) ஆகியோரை நேற்று கேரளாவில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன் - மனைவி இருவரும், சென்னை செனாய் நகரில் ஏபிஎம் அக்ரோ என்ற பெயரில் ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவனத்தை தொடங்கி, சுமார் 2,500 முதலீட்டாளர்களிடமிருந்து 90 கோடி ரூபாய் பெற்றதும், மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காணாமல் போன லாரி டிரைவர் சடலமாக மீட்பு.. முன்விரோதத்தால் பறிபோன உயிர்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.