ETV Bharat / state

பிரதமர் நெல்லை வருகை; காங்கிரஸ் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் - பாஜக குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 11:56 AM IST

PM Modi in Nellai: நெல்லையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்
நெல்லையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். முன்னதாக தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வந்தார். இதை ஒட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், அக்கட்சியினர் கையில் கருப்பு கொடி ஏந்தியபடி, பாளையங்கோட்டையில் உள்ள தனுஷ்கோடி ஆதித்தன் இல்லத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது அவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை முன்பு, கையில் கருப்பு கொடியுடன் மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் மேடை நோக்கிச் செல்ல முயன்றபோது அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட சுமார் 20 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். முன்னதாக மோடி வருகையைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என ஏற்கனவே உளவுத்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக இது போன்று ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்கள் வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கும் பட்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்வர் என்றும், ஆனால், இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தப் போவது தெரிந்தும், தனுஷ்கோடி ஆதித்தன் இல்லத்தில் போலீசார் பணியில் ஈடுபடவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் தனுஷ்கோடி ஆதித்தன் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் கையில் கருப்புக்கொடி ஏந்தியபடி, மாநகரில் முக்கிய போக்குவரத்து சாலையான பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வரை பிரதமரை கண்டித்து போராட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் பிறகு பதறி அடித்துக் கொண்டு உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை கைது செய்தனர்.

நாட்டின் பிரதமர் வருகையைக் கண்டித்து பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கும் வகையில், முக்கிய சாலையில் காங்கிரஸ் கட்சியை போராட வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களிடம், இலங்கை மீனவர்கள் பிரச்னை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லை பாஜக பொதுக்கூட்டம்; பாளையங்கோட்டையில் மூன்றடுக்கு பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.