ETV Bharat / state

நெல்லை ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு; 2வது நாளாக தொடரும் சிபிசிஐடி விசாரணை! - Jayakumar case investigation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:51 PM IST

CBCID investigation on Jayakumar case: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் தலைமையிலான குழு தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நெல்லை சிபிசிஐடி அலுவகலம், ஜெயக்குமார் கோப்புப்படம்
நெல்லை சிபிசிஐடி அலுவகலம், ஜெயக்குமார் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார், கடந்த மே 4ஆம் தேதி அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதனை அடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜெயக்குமாரின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்வழக்கை புலனாய்வு செய்ய கூடுதல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அதேநேரம், ஜெயக்குமார் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பலருக்கும் சம்மன் அனுப்பி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புலன் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தனிப்படைகள், திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றும் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: கை மாறிய ஜெயக்குமார் வழக்கு.. களத்தில் இறங்கியது சிபிசிஐடி.. விறுவிறுப்பாகுமா விசாரணை?

இருப்பினும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறி, வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடய அறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட தோட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி தடயங்களைச் சேகரித்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி நவ் ராஜ்குமார் மற்றும் விசாரணை அதிகாரிகளுடன், காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10 தனிப்படை அமைத்தும் முடியல.. ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.