ETV Bharat / state

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் 460 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 11:55 AM IST

Scholarship For BC Students: மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருவதாக கரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Scholarship For BC Students
கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ் செய்தியாளர் சந்திப்பு

கரூர்: கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி பெண்கள் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில், நேற்று (பிப்.10) ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவிகளிடம் விடுதியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர், “கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவுகளுக்கு, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன்படி தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதியில் உணவின் தரம், பொருட்களின் இருப்பு, அலுவலகப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தோம்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கரூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட 6,144 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, உணவு தொகை ரூ.1,000 ஆக இருந்ததை ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,100 ஆக இருந்ததை ரூ.1,500 ஆக அரசு உயர்த்தி உள்ளது. இந்த திட்டமானது MBC, BC, DNC ஆகிய விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பொருந்தும்.

PM SSP - Pre Matric scholarship மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 கல்வி உதவித் தொகை மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தமானது இந்திய அஞ்சல் வங்கி மூலம், மாணவர்கள் பெயரில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். அதன்படி, கரூர் மாவட்டத்தில் மொத்தம் 5,102 மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட உள்ளன. தற்போது வரை 1,769 மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 3,910 மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்ய, வட்டார வாரியாக இந்திய அஞ்சல் வங்கி உதவியுடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Post Matric Scholarship திட்டம் மூலம், மாணவர்களுக்கு இரண்டு விதங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 4,956 மாணவர்களுக்கு புதுப்பித்தல் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் 5,000 மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

ஆனால், இவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள்ளே இருந்தால் மட்டுமே உதவித் தொகை கிடைக்கும். இந்த உதவித்தொகை பெற பிப்.1 முதல் விண்ணப்பம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், பழைய மாணவர்களுக்கான புதுப்பித்தல் பணியும், பிப்.1ஆம் தேதி முதல் இணையத்தில் தொடங்கி விட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை 6,000 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களாக உள்ள ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்க ஆணையிடப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் மட்டும், இந்தத் திட்டத்தில் 12 பேரும், தமிழக அளவில் 460 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களான தோகமலை, கடவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கூட உயர் கல்வி படிக்க மாணவர்கள் சேர்ந்து படித்து, கல்வி உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம், கரூர் மாவட்டத்திற்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கு 200 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர், கரூர் மாவட்ட மைய நூலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ் ஆய்வு செய்தார். கரூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிடும் வகையில், வங்கிக் கணக்கு இல்லாத மாணவியருக்கு அஞ்சல் வங்கி உதவியுடன் புதிய வங்கிக் கணக்கு துவக்கும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, புதிதாக வங்கிக் கணக்கு துவங்கிய மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டையினை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்டக் கல்வி அலுவலர் காமாட்சி, வட்டாட்சியர்கள் மோகன்ராஜ் ராதிகா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் பொம்மையில் கடத்தி வரப்பட்ட 273 கிராம் தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.