ETV Bharat / state

அனகாபுத்தூரில் சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை.. விமானம் மூலம் அயோத்திக்குச் சென்றடைந்தது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 10:54 PM IST

Updated : Jan 22, 2024, 10:58 AM IST

Ayodhya sita statue: அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் உள்ள சீதாதேவி சிலைக்கு பிரத்தியேகமாக வாழை நார் மூலம் தயாரிக்கப்பட்ட சேலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை விமானம் மூலம் அயோத்திக்கு சென்றடைந்தது
சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை விமானம் மூலம் அயோத்திக்கு சென்றடைந்தது

சீதைக்காக நெய்யப்பட்ட வாழை நார் சேலை விமானம் மூலம் அயோத்திக்கு சென்றடைந்தது

சென்னை: அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்காகச் சென்னையில் பாரம்பரிய இயற்கை நார் நெசவு குழுமத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோயிலில் உள்ள சீதாதேவி சிலைக்கு அணிவிக்க இயற்கையிலான வாழை நார் சேலை தயாரிக்கப்பட்டு குருக்கள் மூலம் சென்னையில் இருந்து விமானத்தில் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் இயற்கைப் பொருள்கள் கொண்டு ஆடைகள் நெசவு செய்யப்படுகிறது. கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் இருந்து நாரெடுத்து காய்கறி, பழங்கள் பட்டைகளில் வண்ணங்கள் எடுத்து சேலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அனகாபுத்தூரில் கடந்த 12 வருடங்களாக இயற்கை நார் நெசவுக் குழுமும் வாழை, மூங்கில், கற்றாழை, பைனாப்பிள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை நார்களின் இழைகளைக் கொண்டு பலவண்ண சேலைகளைத் தயாரிக்கும் நெசவுத் தொழிலில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலைகளுக்கான வண்ணங்களை உருவாக்குவதற்கு வேப்பிலை, மஞ்சள், சந்தனம், சுண்ணாம்பு, கரி, பழங்கள், காய்கறிகள், பட்டைகளில் இருந்து வண்ணங்கள் உருவாக்கி அதனை நார்களில் ஊறவைத்துப் பல வண்ணங்களில் சேலைகளை நெய்து வருகின்றனர். இந்த சேலைகளில் எந்த வகை ரசாயனமும் சேர்க்கப்படாததால் இது உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியையும் தருகின்றன. அது மட்டுமல்லாமல் மூலிகை நார்களில் நெய்கிற சேலைகள் தோல் நோய்களையும் குணப்படுத்தும் என்கின்றனர்.

இயற்கை நார்களில் இருந்து நெய்யப்படும் சேவைகளுக்காகப் பல சான்றிதழ்களையும் அனகாபுத்தூர் நெசவாளர்கள் பெற்றுள்ளனர். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்தியாவிலேயே முதன்முதலாக
வாழை நாரில் சேலை நெய்ததற்காகச் சான்றிதழ், பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இயற்கை இழைகளிலிருந்து எடுக்கப்பட்டு நாரால் நெய்யப்படும் ஒரு சேலையைச் செய்வதற்கு சுமார் மூன்று நாட்கள் ஆகுமாம். இயற்கை நார்களால் செய்யப்படும் சேலைகளின் விலை 1,200 முதல் 7,500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்காக நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அனகாபுத்தூரிலிருந்து இயற்கை நார் நெசவாளர்கள் குழுமத்தின் சார்பில் ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சீதாதேவி சிலைக்கு முழுக்க முழுக்க இயற்கையால் உருவாக்கப்பட்ட 20 அடி நீளத்தில், நான்கடி அகலத்தில் வாழை நார் சேலை தயாரிக்கப்பட்டுள்ளது .

அந்த பிரத்தியேக இயற்கை வாழை நார் சேலையில் அயோத்தி ராமர் கோயில் மற்றும் ராமர் அம்பு விடுவது போன்ற படத்தைப் பொறித்து உருவாக்கி அதனைக் குருக்கள் மூலம் சென்னையில் இருந்து விமான மூலம் அயோத்தி கோயிலுக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதுகுறித்து இயற்கை நெசவு குழுமத்தின் தலைவர் சேகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மூன்றாவது தலைமுறையாக நெசவு செய்து வருகிறோம்.

ஆரம்பக் காலத்தில் காட்டன்களை வைத்து சேலைகள் நெய்தோம் அதன் பிறகு ராமாயண காலத்தில் சீதைக்கு அனுமன் வாழைநார் சேலை கொடுத்ததாக வரலாறு உள்ளது. அதன் பிறகு இயற்கை முறையில் வாழை நாற்றால் சேலை செய்வதைக் கற்றுக்கொண்டு முழுக்க முழுக்க கைகளால் சேலைகளை நெய்து வருகிறோம்.

கடந்த 12 ஆண்டுகளாகப் பழங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகளில் வண்ணங்கள் உருவாக்கப்பட்டு மூங்கில் வாழை தேங்காய் உள்ளிட்டவற்றில் இருந்து நார் எடுக்கப்பட்டு இயற்கை முறையிலான சேலைகளைத் தயாரித்து வருகிறோம். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளதால் அதற்காகக் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே தாங்கள் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இயற்கை நார் நெசவு குழுமத்தின் மகளிர்களை வைத்து ஆலோசனை செய்து ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சீதாதேவி சிலைக்கு இயற்கை நார் சேலை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

இதனால், கடந்த 10 நாட்களாக இரவு பகல் பார்க்காமல் வாழைநார்களைத் தயாரித்து சுமார் 15 நாட்களில் இயற்கை முறையிலான சேலையைத் தயாரித்து அதில் புடவையில் ராமர் கோயில் மற்றும் ராமர் அம்பு செலுத்துவது போல் படம் பொறித்துத் தயாரித்தோம். இந்த சேலை முழுக்க வாழையினர் மற்றும் பட்டுச் சேர்த்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. 4 அகலமும் 20 அடி நீளமும் கொண்டுள்ளது. எந்த ஒரு சாயமும் கலக்காமல் இயற்கை முறையில் சேலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்குவதற்காகத் தயாரித்த சேலையைக் குருக்கள் மூலம் சென்னையில் இருந்து விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு அயோத்தி கோவிலில் கொடுக்கப்பட்டு விட்டது. எங்கள் குழுமத்திற்கு இந்த செயல் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பேசிய அவர் எங்கள் இயற்கை நார் நெசவு குழு மிகவும் கஷ்டத்தில் இயங்கி வருகிறது. மத்திய மாநில அரசுகள் எங்கள் இயற்கை நார் நெசவு குழுமத்திற்கு உதவிகள் அளிக்க வேண்டும் அதன் மூலம் இந்த இயற்கை நார் நெசவு மேன்மை அடையும்” என்றார்.

Last Updated : Jan 22, 2024, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.