ETV Bharat / state

தேனி தொகுதி யாருக்கு..? மும்முனை போட்டியில் மக்களின் ஆதரவு யாருக்கு.. கள நிலவரம் சொல்வது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 12:30 PM IST

Theni Lok Sabha constituency Candidates: நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக சார்பாக டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இம்முறை தேனியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

AIDMK and DMK candidates in Theni Lok Sabaha constituency
AIDMK and DMK candidates in Theni Lok Sabaha constituency

தேனி: நாடாளுமன்ற மக்களவை தேரதலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது.

அன்று அதிமுக விசுவாசி இன்று திமுக வேட்பாளர்: திமுக தரப்பில் தேனி நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2002ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தன்னுடைய எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்தார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டார்.

பின்னர், 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்டார்.

அப்பொது, நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், தங்க தமிழ்ச்செல்வனும் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது தங்க தமிழ்ச்செல்வன் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 1 லடசத்து 44 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அமமுகவில் இருந்து விலகி, அதே ஆண்டு திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன் பின்னர், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக களம் இறங்கினார். ஆனால், 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பின்னர் அவருக்கு மாநிலங்களவையில் இருக்கை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அதிலும் அவருடைய பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது 2024ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தீவிர விசுவாசியாக அறியப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தற்போது அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை களம் இறங்கும் அதிமுக தொண்டர்: தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.டி.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1982ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்றிய வருகிறார்.

இவர் 2002 முதல் 2023 வரை தேனி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும், தற்போது அதிமுகவின் தேனி மாவட்ட (கிழக்கு) ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர், கடந்த 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கேட்டிருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் , முதல் முறையாக தேனி மக்களவை தொகுதியில் அதிமுக தரப்பில் வேட்பாளராக வி.டி.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அதிமுகவில் தங்களது அரசியல் பயணத்தை துவங்கிய, மூவர் தேனி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட உள்ளதால். இந்த முறை தேனி மக்களவைத் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.