ETV Bharat / state

"காவிரியில் இருந்து பங்கு நீரை முழுமையாக பெறாமல் வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 11:00 PM IST

Admk Statement on Cauvery issue: காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெற்று தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசிற்கு அவரது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெற்று தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு திமுகவிற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில், "இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் காவிரியிலிருந்து மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நெல் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. அரசு, நெல் குவின்டாலுக்கு 2ஆயிரத்து 310 ரூபாய் என்று நிர்ணயித்திருந்த நிலையில், வியாபாரிகள் நெல் குவின்டாலுக்கு 3ஆயிரத்துக்கு மேல் வழங்குவதால், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சென்றபோது, அப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் கருகி இருந்ததை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விடியா தி.மு.க. அரசை வலியுறுத்தினேன். 3.2.2024 நிலவரப்படி, 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் சுமார் 70 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதாவது, சுமார் 33 டி.எம்.சி. அளவு தண்ணீர் உள்ளது. இதுவே, கர்நாடக அணைகளில் 124 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92 அடியும், 65 அடி உயரமுள்ள கபினியில் 54 அடியும், 129 அடி உயரமுள்ள ஹேரங்கி அணையில் 102 அடியும் தண்ணீர் உள்ளது.

இந்த ஆண்டு, கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்காக வழங்க வேண்டிய நீரில் சுமார் 90 டி.எம்.சி தண்ணீர் நிலுவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனது அரசியல் கூட்டாளியான கர்நாடகாவில் அமைந்திருக்கும் காங்கிரஸ் அரசிடம் காவிரியில் நமக்குரிய பங்கை வலியுறுத்திப் பெற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்ட விடியா திமுக, காவிரியில் நமக்குரிய பங்கினைப் பெறுவதற்கு இதுவரை எந்தவிதமான முனைப்போ, நடவடிக்கையோ எடுக்கவில்லை.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நமது தண்ணீர் பற்றாக்குறையை எடுத்துக்கூறி நமது பங்கு நீரைப் பெற இந்த விடியா அரசு எந்தவொரு கடுமையான அழுத்தத்தையும் தரவில்லை. ஆனால், திரைமறைவில் விடியா திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் இணைந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தில் மேகதாது பிரச்சனையை ஓட்டெடுப்பு மூலம் நீர்வளக் கமிஷனின் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது. இதை கண்டித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு இதுவரை விடியா திமுக அரசிடமிருந்து எந்தவொருப் விளக்கமும் வெளியிடப்படவில்லை.

இச்சூழ்நிலையில் நேற்று(3.2.2024) டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூரில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க விடியா தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் தற்போது சுமார் 33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடகா நமக்குத் தர வேண்டிய நிலுவை பங்கு சுமார் 90 டி.எம்.சி-ஆக உள்ளது.

எனவே, விடியா தி.மு.க. அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அழுத்தத்தை தர நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க: "அமலாக்கத்துறைக்கு கதவை தட்ட வேண்டிய கஷ்டம் வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.