ETV Bharat / state

கோடம்பாக்கம் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்.. 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது! - Kodambakkam Vehicle damage video

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 5:41 PM IST

Kodambakkam bike damage issue: கோடம்பாக்கம் தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, மளிகை கடைகளை சூறையாடி பணம் கேட்டு மிரட்டிய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்
வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கோடம்பாக்கம் சுபேதர் கார்டன், வரதராஜா பேட்டை மற்றும் டிரஸ்ட்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் சிலர் போதையில் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன், முருக லிங்கம், இம்ரான், ஆசைப்பாண்டி உள்பட 5 பேர், அங்கு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டித்த போது, அந்த கும்பல் ஆத்திரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அங்கிருந்த மளிகை கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி, பணம் கேட்டு மிரட்டி தாமஸ் என்பவரை கத்தியால் வெட்டியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், அக்கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இச்சம்பவத்தில் லேசான காயமடைந்த தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்தி, கட்டை, இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை கைகளில் வைத்துக்கொண்டு, சாலைகளில் நிற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கடைகளை கண்மூடித்தனமாக தாக்கிவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர் சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை வைத்து ரகளையில் ஈடுபட்ட கோடம்பாக்கம் வரதராஜபேட்டையைச் சேர்ந்த குகன் மற்றும் 3 சிறுவர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பல தெருக்களில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள், கடைகளை அந்த கும்பல் அடித்து உடைத்ததாகவும், தனது கடையையும் சூறையாடி பணத்தை திருடிச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மளிகை கடை உரிமையாளர் தேவி தெரிவித்தார். இது குறித்து புகார் தெரிவித்திருப்பதால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் தனது கடைக்கு வந்து, புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டி விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த காவலரின் வைரல் வீடியோ.. நடவடிக்கை எடுக்க TNSTC பரிந்துரை! - Policeman Argue With Bus Conductor

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.