ETV Bharat / state

10 வயது சிறுவன் எழுதிய ஹியூமானிட்டி வின்ஸ் புத்தகம் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:50 PM IST

Updated : Feb 10, 2024, 2:22 PM IST

Porunai Nellai Book Festival: திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் எழுதிய மனித நேயம் வெல்லும் (Humanity wins) என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது.

Porunai Nellai Book Festival
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா

பொருநை நெல்லை புத்தகத் திருவிழா

திருநெல்வேலி: திருநெல்வேலியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை என்பவரின் மகன் (10) கவின் விக்னேஷ். இச்சிறுவன், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மழை, பெரு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டிய மனித நேயமிக்க செயல், மாணவனைப் பெரிதும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவங்களை மனதில் வைத்து, மனித நேயம் வெல்லும் (Humanity wins) என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை மாணவன் எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் முழுவதும் முடிவு பெற்ற நிலையில், புத்தகத்தை வெளியிட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்த நிலையில், தற்போது திருநெல்வேலியில் நடந்து வரும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில், சிறிவனின் புத்தகத்தை வெளியிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் மாணவன் கவின் விக்னேஷ் எழுதிய புத்தகம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்கியபோது பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, “நாங்குநேரி பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைதாகி, பிணையில் தற்போது இருக்கிறார்கள். அவர்களை இன்று நான் சந்தித்தேன் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது பற்றி அவர்களிடம் விவாதித்தேன்.

பிரதமர் 'வசுதைவ குடும்பகம்' என்று அடிக்கடி சொல்கிறார். ஆனால், கணியன் பூங்குன்றனார் முன்னதாக உலகமே ஒரு குடும்பம்தான் என்று தெரிவித்துள்ளார். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார்.

ஆனால், ராஜ்பவனில் உள்ள திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்க்கிறார். திருவள்ளுவர் காவி உடை அணிந்தால் இதனைச் சொல்லி இருக்க மாட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் என்பதை வேரறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவதற்கு 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ இரண்டு ரூபாய் கொடுங்கள் போதும், நான் என் தலையை சீவிக் கொள்கிறேன் என விளையாட்டாக கூறினாலும், அதில் பல அர்த்தங்கள் உள்ளன.

சனாதனம் என்பதற்கு ஒவ்வொருவரும் பல்வேறு விளக்கங்களைச் சொல்கின்றனர். ஆனால், புரிந்து கொள்ளாமல் சொல்வதுதான் அதிகம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளன.

யாவரும் கேளிர்க்கான ஆதாரம், அதற்கான உரிமை, அடிப்படை உரிமையாக வழங்கப்படிருப்பதற்கு காரணம் அம்பேத்கர்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 17வது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. நமக்கு முன்னாடி இருக்கக்கூடிய ஒரே கேள்வி மனு நீதியா? சம நீதியா? இதற்கு விடை நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும்” என்று பேசினார்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் நகர் மன்ற கூட்டம்; மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Last Updated : Feb 10, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.