ETV Bharat / state

கடலூர் இளைஞர் சென்னை விமான நிலையத்தில் மாயம்.. தந்தை அளித்த பரபரப்பு புகார்! - Youth Missing At Chennai Airport

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 9:46 AM IST

Cuddalore Youth Missing At Chennai Airport: சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக விமானத்தில் சென்னை வந்த கடலூர் மாவட்ட இளைஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் மாயமானதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

Chennai Airport File Photo
சென்னை விமான நிலைய கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி (57). விவசாய கூலித்தொழிலாளியான இவருடைய மகன் பெரியசாமி (21). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக, மேற்கொண்டு படிக்காமல், வேலை தேடத் தொடங்கியுள்ளார். அவ்வப்போது இரண்டு முறை, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விட்டு, ஓரிரு மாதங்களில் வேலை பிடிக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டார்.

இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியசாமி, சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு, ஹெல்பர் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கும் வேலை பிடிக்காமல், இந்தியா திரும்ப முடிவு செய்து அந்த தனியார் நிறுவனம், பெரிய சாமியை இந்த மாதம் 10ஆம் தேதி, விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பெரியசாமி வேலையை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு திரும்பி வந்தது அவருடைய பெற்றோருக்கு தெரியாது என்றும், பெரியசாமி சிங்கப்பூரில் வேலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்ததாகவும், ஆனால் சில நாட்களாக பெரியசாமியிடம் இருந்து போன் எதுவும் வராததால், சங்கிலி தனது மகன் பெரியசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்ததால், சிங்கப்பூரில் உள்ள பெரியசாமி பணியாற்றிய நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, பெரியசாமி பணியாற்றிய நிறுவனத்தில், அவர் இந்த மாதம் 10ஆம் தேதியே சிங்கப்பூரிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இலங்கை வழியாக சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், பெரியசாமியைத் தேடி அவரது தந்தை சங்கிலி நேற்று (மே 22) காலை, சென்னை விமான நிலையத்திற்கு வருகைதந்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த தனது 21 வயது மகனை காணவில்லை என்று புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலீசார், இந்த மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக சென்னை வந்த, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், பெரியசாமி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்து, குடியுரிமை சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வெளியில் சென்றுள்ளது தெரிய வந்தது. அதோடு இந்த மாதம் 10ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், போலீசார் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக சென்னை திரும்பி வந்த, இளைஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹில்குரோவ் ரயில் நிலையத்தை சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்.. சுற்றுலாப் பயணிகள் பீதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.