ETV Bharat / state

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு என ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 11:39 AM IST

A C Shanmugam: தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலில், திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களுக்கு தொடா்பு என்பதால், அவா்களை கைது செய்வதில் காவல் துறை தயக்கம் காட்டுகிறது என புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சித் தலைவர்
ஏ.சி.சண்முகம்

ஏ.சி.சண்முகம்

வேலூர்: 2024 நடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது மற்றும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் தொடர் ஓட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய நீதிக்கட்சி சார்பில், குடியாத்தத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமானது, கீழலத்தூரில் உள்ள ஶ்ரீ அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து துவங்கி, தலைமை தபால் நிலையம் தொடர்ந்து, பாபு திருமண மஹாலில் முடிவடைந்தது. 5 கிமீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில், முதல் மூன்று இடங்கள் பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் உட்பட கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அடுத்தடுத்து வந்த ஐந்து பேருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.

பின்னர், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், "டெல்லி காவல்துறையினர் போதைப் பொருட்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவை தமிழகம் வருவதாக கூறியுள்ளனர். போதைப் பொருள்கள் கடத்தலில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களுக்கு தொடா்பு என்பதால், அவா்களை கைது செய்வதில் காவல் துறை தயக்கம் காட்டுகிறது. அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போதைப் பொருள்கள் இளைஞர்களை அழிவுக்கு கொண்டு செல்கிறது. மதுவால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், போதைப் பொருள்கள் மூளையை மங்கச் செய்து 3 ஆண்டுகளில் இளைஞா்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது.

இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த புதிய நீதிக்கட்சி சாா்பில், குடியாத்தம், வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதியில் போதை ஒழிப்பு மாராத்தான் நடத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் திருட்டு, கடன், வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவைகளுக்கு காரணமாக உள்ளது. இவற்றை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம்; 98.18 சதவீதம் பேர் பயனடைந்தனர்.. விடுபட்டவர்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.