ETV Bharat / state

காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 10 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - sivakasi cracker factory explosion

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 7:23 PM IST

Updated : May 9, 2024, 9:33 PM IST

Sivakasi fire accident: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 12 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களின் புகைப்படம்
விபத்தில் இறந்தவர்களின் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: சிவகாசி அருகே ஏற்பட்ட கோர வெடி விபத்தில் பரிதாபமாக 10 பேர் பலியாகியுள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணி உட்பட 12 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (57). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட பட்டாசு அறைகள் உள்ளன.இன்று வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் 50 மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதியம் பட்டாசு ஆலையில் ஒரு பகுதியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த அறையில் இருந்து வெடித்து சிதறிய பேன்சி ரக பட்டாசுகள் அடுத்தடுத்து அறைகளுக்கு பரவியது. இதில் 10க்கு மேற்பட்ட அறைகள் சேதமான நிலையில் 8 அறைகள் முற்றிலுமாக நாசமாகியுள்ளன.

இதனால், அந்தந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிருக்கு அச்சப்பட்டு தப்பி ஓட முயன்றனர். இதில், சிலர் காயத்துடன் உயிர் தப்பினர். பலருக்கு கட்டிட இடிபாடுகள் மேலே விழுந்து பலத்த காயமடைந்தனர். சிலர் உடல்கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அறையின் வெளியில் தூக்கி வீசப்பட்டு கிடந்துள்ளனர்.

இந்த பயங்கர வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர வெடிவிபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் உள்பட 10 உடல்கள் கருகி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள்: வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஆலமரத்துப்பட்டி சுப்புலட்சுமி (வயது 70), ரிசர்வ்லயன் மல்லிகா (35), ஆனையூர் பாறைப்பட்டி நாகஜோதி( 35), காந்திநகர் திருப்பதி (47) கண்ணன் (30), மாரியம்மாள்( 50 ) அழகுராஜா ( 29), இந்திரா (48), ரெக்கம்மாள் ( 40) அம்சவள்ளி (32), திருத்தங்கல் ஜெயந்தி ( 42), அய்யம்பட்டி செல்வி ( 39) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 பேர் பலி: இந்த விபத்தில் முதலி பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28), மத்திய சேனையை சேர்ந்த ரமேஷ் (31), வி.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (47) அய்யம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (37) உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்து சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலையில் சிரித்த முகத்துடன் வீட்டில் இருந்து கிளம்பியவர்களை உடல் கருகியபடி லுங்கியிலும், கோணி பையிலும் தூக்கி சென்ற காட்சிகள் உறவினர்களை கதற வைத்தது. வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் திரும்பும் திசை எல்லாம் அழுகுரல் கேட்டது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 23 வகையான நாய்களுக்கு உடனே கருத்தடை செய்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு! - 23 Dogs Ban In Tamil Nadu

Last Updated :May 9, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.