ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 3:44 PM IST

Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சென்னை: இந்தியாவின் 75வது குடியரசு தின விழா வரும் ஜனவரி மாதம் 26 அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கத் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் முக்கியமான பேருந்து நிலையங்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பகுதியாகச் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 அடுக்கு பாதுகாப்பு முறை வருகின்ற 30ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களைப் பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்திச் சந்தேகப்படும் வாகனங்களைப் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டு வருகின்றனர். அதைப்போல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலைய மல்டி லெவல் காா் பாா்க்கிங்கிற்குள், நீண்ட நேரமாக நிற்கும் காா்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி வீரர்கள், மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாகச் சோதனையிட்டுக் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனர். அதைப்போல் BCAS பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில், ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

அதைப்போல், விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களுக்குள் உள்ளே செல்லும் இடத்தில் பயணிகளுக்குப் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து, விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாகக் கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர். விமான பயணிகளுக்குக் கூடுதலாகச் சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டுப் பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்குச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநர் பதவியை நீக்க தீர்மானம் - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முன்மொழிந்தார் உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.