ETV Bharat / state

பெண்கள் வுஷு தகுதி போட்டி; இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு செல்லும் 40 வீராங்கனைகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 9:14 PM IST

Women Wushu Championships: கோயம்புத்தூரில் நடைபெற்ற பெண்கள் வுஷு சாம்பியன் ஷிப் தகுதி போட்டி நிறைவடைந்த நிலையில் இந்தியாவிலிருந்து இந்த போட்டிகளில் பங்கேற்க 40 தகுதி வாய்ந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர் சபீர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வுஷு தகுதி போட்டி
பெண்கள் வுஷு தகுதி போட்டி

பெண்கள் வுஷு தகுதி போட்டி

கோயம்புத்தூர்: மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ஆம் முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, கேலோ இந்தியா போட்டிகளில் தென் மண்டலம் அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் 19ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ நகரில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச மகளிர் வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்திய வீரர்களுக்கான தேர்வு இன்று (ஜன.22) கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவில் சாதித்த வீராங்கனைகள் உட்பட நாடு முழுவதும் இருந்து 130 பேர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதுகுறித்து வூஷூ அமைப்பின் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர் சபீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஷ்யாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவிலிருந்து இந்த போட்டிகளில் பங்கேங்கேற்க 40 தகுதி வாய்ந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான தகுதி போட்டிகளில் சுமார் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 130 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற வூஷூ சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள் கிடைத்தது.

இந்த முறை கூடுதல் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில் அதிக அளவில் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் கலந்த ஆன்மீகத்தை நிர்மலா சீதாராமன் செய்கிறார் - அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.