ETV Bharat / state

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் போக்சோவில் கைது; திருப்பூரில் பகீர் சம்பவம்! - tiruppur pocso case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 12:51 PM IST

Tiruppur pocso case: திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Pocso case photo
போக்சோ வழக்கு தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்த போது 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயகாளீஸ்வன்(வயது 19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயதான சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 9 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணைக்கு பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்; எனவே, நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், கைதான 9 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 13 வயதான மேலும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 17 வயதான சிறுமி பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இச்சிறுமி குடும்ப வறுமை காரணமாக வேலை தேடிவந்துள்ளார். அப்போது அருகிலுள்ள ரேஷன் கடையில் உதவியாளராக பணியாற்றி வந்த 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுவன், சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், அச்சிறுவனின் நண்பர்கள் 8 பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே, சிறுமியின் தோழியான 13 வயது சிறுமியையும் அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஒரு வருடமாக 2 சிறுமிகளையும் 9 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, 17 வயதான சிறுமி கர்ப்பம் தரித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

9 பேர் மட்டுமின்றி மேலும் சிலர் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையின் முடிவில் பரபரப்பான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த விபத்தில் வட மாநில ஊழியர் உட்பட இருவர் உயிரிழப்பு! - TAMILNADU ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.