ETV Bharat / health

என்ன வெயிலு.. இத செஞ்சாதான் சரியா இருக்கும்.. சம்மர் டிப்ஸ்! - how to protect from summer heat

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 2:53 PM IST

Summer precaution: கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் அதிக வெப்பம் நிலவக்கூடும் என்பதால், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் வழங்கியுள்ளார்.

how to protect from summer heat
how to protect from summer heat

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். மேலும், வெளியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியத் தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும்.

பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்றுநீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும்.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும்.மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது, கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல்நலக் குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான வழிமுறைகள்: குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சீறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

முதியவர்களுக்கான வழிமுறைகள்: தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கான குறிப்புகள்: கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும், அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து, போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது.

எலக்ட்ரானிக் பொருட்களில் கவனம் தேவை: மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால், மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையைப் பெறுகின்றன.

எனவே, கோடை முடியும்வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளைப் பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பங்குனி உத்திரம் சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடங்கியது! - Panguni Uthiram Special Train

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.