வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:56 PM IST

Updated : Feb 15, 2024, 9:18 PM IST

Dr. Rema Chandramohan

Child Health at Summer: கோடைக் காலம் நெருங்கி வரும் வேலையில் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என மருத்துவர் ரேமா சந்திர மோகன் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் சொல்லும் சூப்பர் டிப்ஸ்..!

சென்னை: பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் கடந்தாண்டை விட நடப்பாண்டில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. குறிப்பாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், இன்று (பிப்.15) முதல் பிப்.21ஆம் தேதி வரை 32 முதல் 33 செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரேமா சந்திரமோகன் ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “ வெயில் காலம் நம்மை நோக்கி விரைவாக வந்து கொண்டு இருக்கிறது. அதே போல் குழந்தைகளுக்குத் தேர்வு நேரமும் நெருங்கிக் கொண்டு வருகிறது. எனவே அவர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எப்போதும் கொதிக்க வைத்து, ஆர வைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.நாம் எங்குச் சென்றாலும் கையில் ஒரு பாட்டில் குடி தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். அதே போல் குழந்தைகள் விளையாடிவிட்டு வரும் போது, தண்ணீர் மட்டும் கொடுக்காமல், இளநீர், மோர் மற்றும் பிரஸ் ஜூஸ் கொடுக்கலாம்.

பிரஸ் ஜூஸ் கொடுக்கும் போது அதில் அதிகம் சர்க்கரை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் உடலிலிருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு தர்பூசணி, முலாம் பலம் உள்ளிட்ட நீர்ச் சத்து அதிகம் உள்ள பழங்களைக் கொடுக்கு வேண்டும் அப்போதுதான் தாகம் குறைவதுடன், நீர்ச்சத்தும் அதிகரிக்கும். அதே போல் ஓஆர்எஸ் எனப்படும் சர்க்கரை கரைச்சலை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும் போது இதனைக் கொடுக்கலாம்.

திறந்த வெளியில் விற்பனையாகக்கூடிய பொருள்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. மாறாக வீட்டில் சமைத்த உணவைக் கெடுப்பது தான் நல்லது, இதிலும் அதிக மாசாலா கொண்ட உணவுப் பொருள்களைக் கொடுக்கக் கூடாது. அதே போல் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துள்ள பழங்களைக் கொடுக்க வேண்டும்.

கோடைக் காலங்களில் குழந்தைகள் நேரடியாக வெயிலில் விளையாடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நேரடியாக வெயிலில் விளையாடினால் தோல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், எனவே வெயில் அல்லாத இடங்களில் விளையாடும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வரக்கூடிய சரும நோய்களைத் தடுப்பதற்கு முடிந்தவரையில் காட்டன் துணிகளை உபயோகப்படுத்தினால் வெயிலில் வரக்கூடிய வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும். மேலும் பவுடர் அதிகம் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கலாம். பவுடர், வியர்வைத்துளைகளை அடைத்துக் கொள்வதால் நோய்த் தொற்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றார்.

கோடைக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கு விடுமுறைக்காலங்களில் விடப்பட்டிருந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்களுடன் சென்று உரிய ஆலோசனை பெறலாம். மேலும் குழந்தைகளுக்கு புதிய விஷயத்தை கற்றுக் கொடுக்கலாம். இது போலப் பல வழிகளில் குழந்தைகளுக்கான கோடை விடுமுறையைப் பெற்றோர்கள் பயன்படுத்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?

Last Updated :Feb 15, 2024, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.