ETV Bharat / entertainment

பிப்.2 இன்று ரிலீஸ் ஆகும் நான்கு படங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 11:52 AM IST

Tamil movies released today: தமிழ் சினிமாவில் இன்று (பிப்.2) திரையரங்குகளில் வெளியாகியுள்ள படங்கள் என்னென்ன என்பதை குறித்து இச்செய்தியில் பார்க்கலாம்.

இந்த வாரம் ரிலீஸான படங்கள்
இந்த வாரம் ரிலீஸான படங்கள்

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு முன்னணி நடிகர்கள் பலரின் படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. அந்த வகையில் இன்று (பிப்.2) மட்டும் நான்கு தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர், அடுத்தடுத்த வாரங்களில் சிறிய படங்கள் மட்டுமே வெளியான நிலையில், இம்மாதத்தின் முதல் வரமான இன்று சந்தானத்தின் 'வடக்குப்பட்டி ராமசாமி', வித்தார்த்தின் 'டெவில்' மற்றும் மறக்குமா நெஞ்சம், சிக்லெட்ஸ் என நான்கு படங்கள் வெளியாகி உள்ளன.

வடக்குப்பட்டி ராமசாமி: இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜான் விஜய், இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லரில் பெரியார் குறித்த சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. ஏற்கனவே,'டிக்கிலோனா' படத்தின் மூலம் வெற்றியை பெற்ற இயக்குநர் கார்த்திக் யோகி-சந்தானம் கூட்டணி மீண்டும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டெவில்: 'சவரக்கத்தி' படத்தின் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'டெவில்'. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம், இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் 'ட்ரைன்' படத்திற்கும் மிஷ்கினே இசையமைக்கிறார். மேலும், படத்தின் இயக்குநர் ஆதித்யாவும், மிஷ்கினும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படமும் ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மறக்குமா நெஞ்சம்: சின்னத்திரை பிரபலம் ரக்ஷன், வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'மறக்குமா நெஞ்சம்'. பள்ளிப் பருவ காலத்தை மையமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக மலினா நடித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், தீனா, ராகுல் எனப் பலர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்துள்ளனர்.

சிக்லெட்ஸ்: அதேபோல், அறிமுக நடிகர்கள் பலர் நடித்துள்ள 'சிக்லெட்ஸ்' எனும் படமும் இன்று திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் முத்து எம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாதிக் வர்மா, ஜாக் ராபின்சன், சுரேகா எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஹார்ட் பீட் வெப் சீரிஸ் தீம் பாடலை வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.