ETV Bharat / entertainment

"ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒரு முதலமைச்சரின் கதை".. இயக்குநர் வசந்தபாலன் வைத்த ட்விஸ்ட்! - Director Vasanthabalan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 3:09 PM IST

Director Vasanthabalan: ஒரு முதலமைச்சர் நல்லவரா, கெட்டவரா, ஊழல் பண்ணியிருக்காரா, இல்லையா என்றும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒரு முதலமைச்சரின் அகம் புற மனச் சிக்கல்களை போன்றவற்றை விளக்கும் கதை தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Director Vasanthabalan and Thalaimai Seyalagam web series poster
Director Vasanthabalan and Thalaimai Seyalagam web series poster (Photo Credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஜீ 5 மற்றும் ராடான் மீடியா ஒர்க்ஸ் - ராதிகா சரத்குமார் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் பரத், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் சீரிஸ் 'தலைமைச் செயலகம்' (Thalaimai Seyalagam). இந்த வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் பரத், சரத்குமார், நிரூப், நடிகைகள் ராதிகா சரத்குமார், தர்ஷா குப்தா, இயக்குநர்கள் வசந்தபாலன், சந்தான பாரதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ஸ்ரேயா ரெட்டி, "வசந்தபாலனுக்கு நன்றி. இந்த கதையில் கொற்றவை என்ற அழகான, போல்டான கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ராதிகா மேடம் அழகாக கதையைப் பற்றிச் சொல்லி ஓகே பண்ண வச்சாங்க. வசந்தபாலன் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்குவார். கண்ணைப் பார்த்து டயலாக் பேசாதீங்க, திமிரு பட லுக் வந்துடும். அதனால் கண்ணை கீழ பார்த்து பேசுங்க என்று சொல்லுவார்‌” என படபிடிப்பில் நடந்ததை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், "2002-இல் இயக்குநராக பயணத்தை துவங்கினேன். 22 வருடமாக வெற்றி, தோல்வி என நிறைய பார்த்துவிட்டேன். நிறைய விருதுகளைப் பார்த்து கடந்ததற்கு நன்றி. 22 வருடத்தில் 7 படங்கள். 1 வெப் சீரிஸ். காரணம் ஐ லவ் சினிமா. பாலனுக்கு சினிமாவில் கன்பியூஷன் இருக்கிறது என்று ராதிகா பேசியதை சுட்டி காட்டினார். வெயில் படம் முடிந்த பிறகு ஒரு படம் பண்ண வேண்டும் என்று சரத்குமார் செக் கொடுத்தார். நிஜமாக காசுக்காக வேலை செய்யும் ஆள் கிடையாது. என் படத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

ரங்கநாதன் தெருவில் 'அங்காடித்தெரு' படம் ஷூட் பண்ண முடியுமா என்று நினைத்தோம். ஆனால் நடந்தது. நீங்கள் நம்பினால் நிச்சயமாக நடக்கும். அதை என் வாழ்நாள் முழுவதும் பார்த்திருக்கிறேன். ஷங்கர் படத்திலும் பார்த்திருக்கிறேன். எனக்கும் நடந்திருக்கிறது என்று வெயில் படத்தை விருதுநகரில் ஷூட் பண்ணியது குறித்து பேசினார்.

மேலும், கரோனா காலத்தில் ராதிகா மேடம் ஃபோன் பண்ணி இந்த கதையைச் சொன்னாங்க. அப்போதே சரத்குமார் சூப்பராக இருப்பதாகச் சொன்னார், வெறும் அரசியல் படமாக எல்லாரும் பண்றாங்க. கிரிட்டிசைஸ் பன்றாங்க. அரசியல் படத்தை தாண்டி, இதில் வேறொன்று சொல்ல வேண்டும். எந்த அரசியல் படத்திலும் சிஎம் கெட்டவர் தான். ஆனால், முதல் முறையாக முதலமைச்சர் நல்லவரா, கெட்டவரா, ஊழல் பண்ணியிருக்காரா, பண்ணலையா என்றும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒரு முதலமைச்சரின் அகம் புற மனச் சிக்கல்களை இந்த படம் தெரிவிக்கும்.

இந்த சமூகத்தில் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய நினைத்தால் அதற்கு சில தவறுகளைச் செய்ய வேண்டும். அந்த தவறுகளுக்கு தண்டணை கிடைக்கும். இந்த படத்தில் அரசியலைத் தாண்டி பேச சில விஷயங்கள் இருக்கிறது. ஜார்க்கண்ட்டில் இருக்கக்கூடிய பழங்குடியினர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர்களது வீடுகள் கொளுத்தப்பட்டு ஓடி வருகின்ற ஒரு பெண்ணின் கண்களில் இருந்து இந்த கதை துவங்குகிறது.

நிறைய கேள்விகளை இந்த வெப் சீரிஸ் தூவினாலே மகிழ்ச்சி தான். 3 வருடங்களுக்கு முன் இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் போகிற வாய்ப்பு கிடைத்தது. அதில் டாப் டூ பாட்டம் வரை தமிழ்நாடு அவ்வளவு முன்னேறி இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம், மெடிக்கல், ரோட்டில் இருந்து அவ்வளவு முன்னேறி இருக்கிறது.

ஒரு குழந்தை கருவில் இருப்பது முதல் மனிதனாக சாவது வரை சட்டங்களை அரசாங்கம் வகுத்திருக்கிறது. அந்த பதவிக்கு யார் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, ஒவ்வொருவருக்குமான அரசியல் பாதுகாப்பை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. என்ன ஊழல் இருந்தாலும், அரசாங்கம் இதை வழங்கியது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த உலகத்தில் ஜனநாயகத்தை விட சிறந்த ஆட்சிமுறை எதுவும் இல்லை என்று தோன்றியது. ஜனநாயகத்தை கட்டமைக்க ஊழல் நிறைந்ததாக தான் இருக்கும். இந்த கட்டமைப்பை ஒவ்வொரு முறையும் தவறாமல் காப்பாற்ற வேண்டும். ஜெயிப்பவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்கட்சியாக இருப்பவர்களுக்கும் ஓட்டு போட வேண்டும் என்ற அரசியலைப் பேசும் சிறிய படமாக இருந்தாலும் போதும்.

நம் பேருக்கு பின்னால் சாதியைப் போடாமல் இருப்பதே ஒரு அரசியல் தான் என்று நினைக்கிறேன். நீ என்ன சாதி என்று கேட்காமல் இருப்பதே ஒரு அரசியல் தான். ஏதோ ஒரு விதத்தில் ஒரு புள்ளி இந்த வெப் சீரிஸ் நகர்த்தினாலே சந்தோஷம். வெயில் படத்தில் ஸ்ரேயா ரெட்டி 3 நாட்கள் தான் நடித்தார்கள்.

அவங்க கூட சரியாக பேசக்கூட முடியவில்லை. அரசியலில் கடைசி தீயில் இருந்து கிளம்பி வந்த கொற்றவையாக தான் பார்க்கிறேன் என ஒவ்வொருவராக படக்குழுவினரை பாராட்டி பேசினார். மேலும், இந்த கதை முழுவதும் புனைவு. எதற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சின்னதிரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல்.. தலைவராகிறார் மங்கை அரிராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.