ETV Bharat / entertainment

“மிஷ்கின் சாருக்கு நன்றி”.. துப்பறிவாளன் 2 அறிவிப்பை வெளியிட்ட விஷால்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 10:34 PM IST

Vishal about Thupparivaalan 2: நடிகர் விஷால் தான் இயக்குவதாக திட்டமிட்டிருந்த துப்பறிவாளன் 2 படத்தை தொடங்கவுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஷால்
விஷால்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். துப்பறியும் கதைக்களத்தில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

2019ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த போது, மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்தார். ஆனால், அதன்பின் வேறு படங்களில் விஷால் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உண்மையில் வார்த்தைகள் வரவில்லை. 25 வருட கனவு இன்று நனவாகிறது. 25 வருடத்திற்கு முன் நான் இயக்குநராக வேண்டும் என்று அப்பாவிடம் சென்று சொன்னேன். அதனை உணர்ந்த அவர், என்னை நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார்.

அவர் என்னை ஸ்க்ரீன் டெஸ்ட் செய்து, அப்பாவிடம் இவனை நடிக்க அனுப்புங்க, எப்ப வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம் என்றார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து, உங்கள் ஆதரவால் ஒரு நடிகனாக உங்கள் முன்னால் நிற்கிறேன்‌. உங்களுக்கு முதலில் எனது நன்றிகள்.

தொடர்ந்து எத்தனையோ முறை இயக்குநர் ஆகும் ஆசை வரும் நேரத்தில், நடிகனாக பயணம் தொடரும்போது அதனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இருந்துவிட்டேன். 25 ஆண்டுகள் கழித்து, இன்று அதற்கான நேரம் வந்துவிட்டது. துப்பறிவாளன் 2ஆம் பாகத்திற்காக லொகேஷன் பார்க்க லண்டன் செல்கிறோம். மே மாதம் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். லண்டனில் இருந்து அஜர்பைஜான், அங்கிருந்து மால்ட்டா செல்கிறோம். ஒரு இயக்குநராக உங்கள் முன்னால் பேசுவது சந்தோஷமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறது.

வாழ்க்கையில் கனவு, லட்சியம் வைத்திருப்பதும் அது நிறைவேறுமா என்ற எண்ணம் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். தைரியமும், மன உறுதியும் இருந்தால் எத்தனை வருடம் ஆனாலும் அதை சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த தருணத்தில் அப்பாவுக்கும், அர்ஜுன் சாருக்கும் உங்கள் பெயரைக் காப்பாற்றுகிற மாதிரி துப்பறிவாளன் 2 படத்தை நல்லபடியாக கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்.

ரொம்ப முக்கியமாக மிஷ்கின் சாருக்கு நன்றி, உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். நான் எந்த குழந்தையையும் சினிமாவிலும், எனது நிஜ வாழ்க்கையிலும் கைவிட்டதில்லை. உங்கள் குழந்தையை தத்தெடுத்து அதனை கரைசேர்க்க எல்லா வகையிலும் கடுமையாக வேலை செய்வேன், நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் Romance' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.