ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டசபை வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 9:46 PM IST

Puducherry assembly: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனச் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் செல்வம்
சபாநாயகர் செல்வம்

சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 22ம் தேதி தாக்கல் செய்கிறார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் செல்வம் பேசுகையில், “புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் சட்டசபையில் 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாகக் கடந்த செப்டம்பர் 9ந் தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வரும் 22ந் தேதி காலை 9.45 மணிக்குச் சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்." என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 2024-25ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன் வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துரை செய்யப்படும். பேரவை முன் வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றைச் சட்டசபையில் வைக்க அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

2024-25ம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாகச் செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

தற்போது இயங்கி வரும் சட்டமன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் முழுமையாகப் பராமரித்து அதன்பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது. அதோடு சட்டசபையின் நிலையைக் கருத்தில்கொண்டு தான் தரை தளத்தில் இல்லாமல், புதிய கட்டிடத்தின் 4வது மாடியில் சபாநாயகர் அலுவலகத்தை அமைத்துள்ளோம்.

புதிய சட்டமன்றத்துக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர். இதற்காகத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 5 மாதமாகத் துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அவர் அளவீட்டில் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டசபை கட்டாயம் கட்டப்படும். இந்த பழைய கட்டிடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப்பிடிக்கும். இதனால் விரைவில் புதிய சட்டசபைக்குப் பூமி பூஜை நடத்துவோம். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்ட 100 அடி நீள சுவர் சரிந்து விபத்து! கடைகள் இடிந்து தரைமட்டம்! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.