ETV Bharat / bharat

லிவ்-இன்; திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு கிடுக்குப்பிடி.. பொது சிவில் சட்ட மசோதா கூறுவது என்ன?

author img

By PTI

Published : Feb 7, 2024, 1:02 PM IST

Updated : Feb 7, 2024, 6:56 PM IST

Live-in relationship law in UCC: உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொது சிவில் சட்ட மசோதாவின்படி, லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களது உறவை பதிவு செய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக, இந்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தது. இதன்படி, திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் வாரிசு ஆகிய உரிமைகளுக்கானச் சட்டம் அனைவருக்கும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த மசோதாவின் மூலம் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதன்படி, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டால், லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால், அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக 18 வயதுக்கு கீழ் இருக்கக் கூடாது. ஆனால், லிவ்-இன் உறவில் இருப்பவர்களில் இருவரில் ஒருவர் 21 வயதுக்கு உட்பட்டு இருப்பின், இது குறித்து அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சம்பந்தப்பட்ட பாதுகாவலர் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை லிவ்-இன் உறவு குறித்து பதிவு செய்யாதது கண்டறியப்பட்டால், பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் - 2024-இன் படி, அதிகபட்சமாக 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். அல்லது இவை இரண்டும் தண்டனைகளாக வழங்கப்படும். மேலும், பதிவாளரிடம் அளிக்கப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக இருந்தால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் சட்ட மசோதா கூறுகிறது.

இந்த சட்டமானது உத்தரகாண்டில் இருக்கும் லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும், லிவ்-இன் உறவில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கும் பொருந்தும். அதேநேரம், மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்களும், இந்த சட்டத்தின் உட்பிரிவான 381 பிரிவு (1)-இன் கீழ் தாங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படுவர். அதேபோல், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண் தனித்து விடப்பட்டால், தனக்கான உரிமையைக் கோரி தனது லிவ்-இன் துணை உறவிடம் இருந்து பராமரிப்புத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் இச்சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இதற்கான நிவாரணத்தை நீதிமன்றத்தை நாடி பாதிக்கப்பட்டவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சட்ட மசோதா கூறுகிறது.

இதையும் படிங்க: பொது சிவில் சட்டம் என்றால் என்ன? மக்களவை தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஏன் தீவிரம்?

Last Updated : Feb 7, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.