ETV Bharat / bharat

காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு என்ன? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

author img

By PTI

Published : Feb 24, 2024, 1:53 PM IST

Congress - AAP seat sharing: டெல்லி, குஜராத், சண்டிகர், ஹரியானாவில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

Congress and Aam Aadmi Party seat sharing completed for lok sabha election
காங்கிரஸ் - ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி விலகிய நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்வதில் கட்சிகள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமூகம் ஏற்பட்டு, காங்கிரஸ்-க்கு சமாஜ்வாதி 17 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். மேலும், கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ்-க்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு ஹரியானா, குஜராத், சண்டிகர், கோவா ஆகிய இடங்களுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், இன்று ஆம் ஆத்மியுடனான தொகுதிப் பங்கீடு குறித்து முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.

அதில், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் 24 இடங்களில் காங்கிரஸ், 2 இடம் ஆம் ஆத்மிக்கும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஹரியானாவில் 10 தொகுதிகளில் 9 இடங்கள் காங்கிரஸ், 1 தொகுதி ஆம் ஆத்மிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவா, சண்டிகரில் காங்கிரஸ் போட்டியிடும் என வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லியில் இரு கட்சிகளும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டாலும், 7 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவோம் என வாஸ்னிக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், பஞ்சாப்பில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும்.. நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை பிரத்யேகமாக அளித்த சிவராஜ் சிங் சவுகான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.