ETV Bharat / bharat

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!

author img

By ANI

Published : Feb 6, 2024, 12:12 PM IST

Updated : Feb 6, 2024, 8:02 PM IST

UCC bill in Uttarakhand: அனைத்து மக்களும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றும் நோக்கிலான பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்தார்.

Etv Bharat
Etv Bharat

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (பிப்.5) தொடங்கி, 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றும் நோக்கிலான பொது சிவில் சட்ட மசோதாவை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்து உள்ளார்.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலின்போது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தரகாண்ட் அரசு, கடந்த மார்ச் 2022-இல் பொது சிவில் சட்டத்தை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது.

இந்த கமிட்டி பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக் கேட்புகளுக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்திற்கான வரைவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் ஒப்படைத்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில், பொது சிவில் சட்டத்தை புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்துள்ளார்.

அப்போது, சட்டத்தின் அசல் உரையையும் அவர் கொண்டு வந்தார். இதனையடுத்து, தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொது சிவில் சட்ட மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே பேரவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றால், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் திகழும்.

அதேநேரம், ஏற்கனவே போர்ச்சுக்கீசிய ஆட்சிக் காலத்தில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பொது சிவில் சட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை அல்லது வாரிசு சட்டங்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் ஒன்றாக மாறும்.

இதையும் படிங்க: "மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்" - மக்களவையில் பிரதமர் மோடி!

Last Updated :Feb 6, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.