ETV Bharat / bharat

"மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்" - மக்களவையில் பிரதமர் மோடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:51 PM IST

Updated : Feb 6, 2024, 5:26 PM IST

Pm Modi speech in Lok sabha: மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக 370 இடங்களை கைப்பற்றி மீண்டும் அட்சி அமைக்கும் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர், "கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக அரசு மிகப் பெரும் பங்காற்றி உள்ளது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இல்லாத துறை என்ற இலக்கை அரசு எட்டி உள்ளது.

அரசின் திட்டங்களால் நாடு முழுவதும் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர். விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.2.80 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஏழை பெண்களுக்கு 17 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் 3 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன.

ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. பாஜகவின் தாரக மந்திரம் வளர்ச்சியே ஆகும். எங்கள் சாதனைகளாலும் வளர்ச்சித் திட்டங்களாலும் வரும் மக்களவைத் தேர்தலிலும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.

பாஜக மட்டும் 370 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சிகளின் இந்த நிலைக்கு காங்கிரசே காரணம். மீண்டும் மீண்டும் ஒரே முகத்தை காங்கிரஸ் முன்னிறுத்துவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது.

நாட்டையும் மக்களையும் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்று கூறி பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். உங்கள் பார்வையில் நாட்டில் மீனவர்கள் சிறுபான்மையினர் இல்லை, விவசாயிகள் சிறுபான்மையினர் இல்லை, கால்நடைகளை மேய்ப்பவர்கள் சிறுபான்மையினர் இல்லை, ஆனால், மத அடிப்படையில் மக்களை சிறுபான்மையினர் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கூறுவீர்கள்? மத ரீதியாக மக்களை பிரித்து சிறுபான்மையினர் என்று கூறி நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்க வேண்டாம்.

பிற்படுத்தப்பட்டோருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். என்னை குஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்ற காங்கிரஸ் முயற்சித்தது. அமலாக்கத்துறையை எதிர்ப்பவர்கள் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பிடிபடுவது ஏன்?. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்குத் தெரியவில்லை.

ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்ததல்ல. காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது இந்தியா 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டு இருக்கிறது. சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிக்கடன் திட்டம் அமலாகியுள்ளது. நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கே பாஜக அரசு முன்னுரிமை அளிக்கும். ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க : சண்டிகர் மேயர் தேர்தல்: "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.. ஜனநாயக படுகொலையை ஒருபோதும் அனுமதியோம்" - உச்ச நீதிமன்றம்!

Last Updated :Feb 6, 2024, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.