தமிழ்நாடு

tamil nadu

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தை மூழ்கிச் செல்லும் தண்ணீர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 5:40 PM IST

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளையங்கிரி மலையில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று (டிச. 9) காலை முதல் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மங்கலம் அருகில் உள்ள நல்லம்மன் தடுப்பணையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணையின் நடுவில் அமைந்துள்ள நல்லம்மன் கோயில் முழுமையாக மூழ்கி உள்ளது. மேலும் கோயிலுக்குச் செல்லக் கூடிய சிறு பாலமும் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நொய்யல் வெள்ளப்பெருக்கு காரணமாக காலேஜ் சாலை மற்றும் மங்கலம் சாலையை இணைக்கும் அணைப் பாளையத்தின் தரைப்பாலம் மூழ்கியது. திருப்பூரில் மழை பெய்யாத நிலையில், கோவைக்கு மேற்கு பகுதியில் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெள்ள நீர் பாலத்தின் மேலே பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தை செல்லாத வகையில் மத்திய போலீசார், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details