தமிழ்நாடு

tamil nadu

ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்.. சேலத்தில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 6:47 PM IST

சேலத்தில் தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டம்

சேலம்:சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(அக்.11) பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூய்மை பணியாளர்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள்:அரசு பணியில் இருக்கும் பட்டியலின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட டி-பிரிவு மற்றும் நான்காம் நிலை பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது. உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வார விடுமுறை, ஆயுள் காப்பீடு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

சேலம் மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் மற்றும் பிஎஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். மோசடி செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் பெண் தொழிலாளர்கள் மீது கடுமையான பணிகளை திணிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.11) சேலம் பழைய பேருந்து நிலையம் உள்ள திருமணிமுத்தாறு ஆற்று தண்ணீரில், இறங்கி 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் மற்றும் ஆண் பணியாளர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சேலம் டவுன் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஆற்றிலேயே நின்று போராடப்போவதாக, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆற்றிலேயே நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details