தமிழ்நாடு

tamil nadu

கொசுவத்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் மரணம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 6:12 PM IST

கொசுவத்தியால் படுக்கை தீப்பிடித்து எரிந்த சம்பவம்

சென்னை:சென்னை கண்ணகி நகர், 11வது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). சென்னை சாந்தோமில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்த இவர் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று (அக்.25) இரவு சுமார் 11 மணியளவில் மது அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதனால் கொசுவத்தி ஏற்றி வைத்து விட்டு உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (அக்.25) வழக்கம் போல் கொசுவத்தி ஏற்றி வைத்துவிட்டு உறங்கிய மூர்த்தியின் படுக்கையில், கொசுவத்தி நெருப்பு பட்டு தீ பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துவிட்டு வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நெருப்பில் சிக்கி மூர்த்தி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த வந்த கண்ணகி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details