தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் அலட்சியமாக காரின் கதவை திறந்ததால் பறிபோன உயிர் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 7:39 PM IST

அலட்சியமாக காரின் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபத்து

நாமக்கல்: வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். விவசாயியான இவர், ஆட்டோ ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மனைவியுடன் தங்கியிருந்த சரவணன், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சொந்த ஊருக்குச் செல்வதற்காக நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பெண் ஒருவர், பின்னால் வாகனம் வருவதை கவனிக்காமல், திடீரென தனது காரின் கதவைத் திறந்துள்ளார்.

அதில் மோதிய சரவணன் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணம், நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சித்ரா என்பதும், சாலையின் இருபுறங்களையும் பார்க்காமல் அலட்சியமாக காரின் கதவை திறந்ததே காரணம் என்பதும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சரவணன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details