தமிழ்நாடு

tamil nadu

வைகுண்ட ஏகாதசி: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 10:10 AM IST

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை:தல்லாகுளம் பகுதியில் புகழ்பெற்ற வைணவத்தலமான பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமலை நாயக்க மன்னரால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலின் உபகோயிலாகத் திகழ்வதுடன், தல்லாகுளம் பெருமாள் கோயில் பல்வேறு சிறப்புக்களை கொண்ட திருத்தலமாகவும் கருதப்படுகிறது.  

இக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பகல்பத்து திருவிழா வெகுவிமர்சையாக துவங்கப்பட்டது. அதன்படி, நாள்தோறும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னம், யானை, கருடர் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், இன்று (டிச.23) தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி 'வைகுண்ட ஏகாதசி' பெருவிழாவை முன்னிட்டு காலை 4.30 - 5.10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் மங்கல வாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசலில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா.. கோவிந்தா.." எனும் கோஷம் முழங்கிட பெருமாளை தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அதிகாலையிலேயே மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 

கோவிந்தா, நாராயணா கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று வணங்கினர். நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்று இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இராப்பத்து உற்சவம் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details