தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் வங்கி மேலாளரை தாக்கிய தந்தை மகன் கைது

By

Published : Jun 17, 2023, 6:32 AM IST

வங்கி மேனேஜரை தாக்கிய தந்தை மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம்புதிய முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் தனது மகன் இசக்கி செல்வம் என்பவரது பெயரில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரனி கிராமத்தில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த 2016ஆம் ஆண்டு கல்விக் கடன் வாங்கியுள்ளார். ஆனால், இந்த கல்விக் கடனை முறையாக திருப்பி செலுத்தாமல் இருந்ததாகத் தெரிகிறது. 

மேலும், பொன்ராஜ் இதே வங்கியில் தனது நகையையும் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில், கல்விக் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் நகையை திருப்பித் தர மாட்டோம் என வங்கி மேலாளர் திவாகர் பொன்ராஜிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொன்ராஜ் நேற்று (ஜூன் 16) காலை தனது மகன் இசக்கி செல்வத்துடன் வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் திவாகருடன் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கி செல்வம் வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோரை வங்கியின் உள்ளே வைத்தே தாக்கியுள்ளார். மேலும், அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளார்.

பின்னர், இசக்கி செல்வம் தாக்கியதில் காயமடைந்த வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி செல்வம் மற்றும் அவரது தந்தை பொன்ராஜ் ஆகிய இருவரையும் தாளமுத்து நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details