தமிழ்நாடு

tamil nadu

உயிரிழந்தும் 12 பேரை வாழ வைத்த இளைஞர் - மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

By

Published : Apr 28, 2023, 8:45 PM IST

உடல் உறுப்புகள் தானம்

சென்னை: சிட்லப்பாக்கம், ஜானகிராமன் தெருவில் வசிப்பவர், பாஸ்கர். இவருடைய மகன் கார்த்திகேயன். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு(ஏப்.23) கேம்ப் ரோட்டில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மகாலட்சுமி நகர் பிரதான சலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது தட்டுத்தடுமாறி தானே எழுந்து ஓரமாக அமர்ந்த கார்த்திகேயன் தனது மாமாவுக்கு போன் செய்து விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கூறினார். 

பின்பு, கார்த்திகேயனை தொடர்புகொள்ள முயலும்போது, அவரின் மொபைல் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திகேயனின் பெற்றோர் உள்ளிட்டோர் இரவு முழுவதும் அவரை தேடி அலைந்துள்ளனர். மறுநாள் காலை கடை திறக்க வந்த கடைக்காரர், கார்த்திகேயன் மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து சேலையூர் போலீசாருக்குத் தகவல் அளித்து 108 வாகனம் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு மூளைச்சாவு ஏற்பட்டதாகத் தெரிவித்து உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பப்பட்டால் நீங்கள் செய்யலாம் எனக் கூறியுள்ளனர். உடனே அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்ததன் பேரில், கார்த்திகேயனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், இன்று (ஏப்.28) சிட்லப்பாக்கம் கொண்டுவரப்பட்ட கார்த்திகேயன் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், நண்பர்கள் எனப் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக, கார்த்திகேயனின் தந்தை பாஸ்கரன் கூறுகையில், 'விபத்தில் சிக்கிய போது செல்போன் திருடு போகாமல் இருந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். இது போன்ற, விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவுங்கள்; அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அதன் பிறகு உங்களுக்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இது போன்ற, தவறுகளை செய்யாதீர்கள்' என மிகவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details