தமிழ்நாடு

tamil nadu

சவக்குழியில் இறங்கி சடலத்தை அடக்கம் செய்ய போராடிய நபரால் பரபரப்பு!

By

Published : Apr 21, 2023, 7:59 PM IST

சவக்குழியில் இறங்கி சடலத்தை அடக்கம் செய்ய மறுப்பு!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பச்சைபெருமாள்புரத்தினைச் சேர்ந்தவர், அப்பாவு (80). இவர் உடல் நலம் குன்றியதால் நேற்று (ஏப்ரல் 20) காலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை இவரது உடலை சுடுகாட்டில் புதைப்பதற்கான பணிகளை, அவரது உறவினர்கள் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, முதியவரின் உடலை இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். 

அப்போது, சுடுகாடு அருகே நிலம் வைத்துள்ள செல்லம்குளத்தினைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், முதியவரின் சடலத்தை புதைக்க தோண்டியுள்ள இடம் தனக்குரியது என்றும், எனவே சடலத்தை இங்கு புதைக்கக் கூடாது என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அது மட்டுமல்லாமல், உயிரிழந்தவரைப் புதைக்கத் தோண்டிய குழிக்குள் இறங்கிய மாரியப்பன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மது போதையில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு தகராறு  செய்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாரியப்பன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய அளவீடு செய்த பிறகு இடம் தொடர்பாக பேசிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாரியப்பன் போராட்டத்தினை கைவிட்டுள்ளார். இதன் காரணமாக, முதியவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details