தமிழ்நாடு

tamil nadu

'எங்களுக்கு 20 கிலோ ரேஷன் அரிசி போதாது' - கூட்டத்தில் அமைச்சரிடம் சத்தமாக கோரிக்கை விடுத்த மூதாட்டி

By

Published : Mar 16, 2023, 7:12 PM IST

”எங்களூக்கு 20 கிலோ ரேஷன் அரிசி போதாது” கூட்டத்தில் அமைச்சரிடம் சத்தமாக கோரிக்கை விடுத்த பெண்

புதுக்கோட்டை: பூங்குடி ஊராட்சிக்குட்பட்ட மேக்குடிப்பட்டியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழாவின் போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மேடையில் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அமைச்சர் ரகுபதியிடம் அந்த ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த மகிலாம்பாள் என்ற மூதாட்டி பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார். அவர், ''குளத்து வேலைக்கு மூன்று மாதங்களாக பணம் வரவில்லை'' என்று சத்தமாக கூறியும், மேலும் ''தங்கள் குடும்பத்திற்கு அரசு வழங்கும் 20 கிலோ ரேஷன் அரிசி போதாது; கூடுதலாக 5 கிலோ அரசு வழங்க வேண்டும்'' எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனைக் கேட்ட ரகுபதி, தனது பேச்சை நிறுத்திவிட்டு அந்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று
அரசு சார்பில் அவ்வாறு வழங்குவது தற்போது சாத்தியமில்லை என்றும், அவ்வாறு வழங்குவது என்றால் உரிய அரசாணை பிறப்பித்து தான் வழங்க முடியும் என்று கூறினார். 

இந்நிலையில் அந்த மூதாட்டியின் குடும்பச்சூழ்நிலை உணர்ந்து அவருக்கு மட்டும் மாதம் 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்க சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவி அருணாதேவி பொறுப்பு எடுத்துக்கொள்வார் என அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

இனி மாதம்தோறும் அம்மூதாட்டி குடும்பத்திற்கு ஊராட்சித் தலைவி ஐந்து கிலோ அரிசி கூடுதலாக வழங்குவார் என்றும், அதற்காக எல்லோரும் கூடுதலாக அரிசி கேட்டுவிடாதீர்கள் என்றும், அப்படி கேட்டால் ஊராட்சி தலைவியால் கொடுக்க முடியாது எனவும் மேடையிலேயே அமைச்சர் ரகுபதி கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ”பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதால் மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளதாகவும், இல்லை என்றால் செய்தியை தவறாகப் பதிவிட்டு விடுவார்கள்” என்றும் அமைச்சர் ரகுபதி கூறியதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

நிகழ்ச்சி நடக்கும்போதே, ''குளத்து வேலைக்கு மூன்று மாதங்களாக பணம் வரவில்லை'' என்று சட்டத்துறை அமைச்சரிடம் பார்வையாளர் பகுதியிலிருந்து சத்தமாக கூறிய மூதாட்டியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details