தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சதுர்த்தி: ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகருக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 12:56 PM IST

கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: புலியகுளம் விநாயகருக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்!

கோயம்புத்தூர்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப். 18) கோவையில் உள்ள ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு சந்தன காப்புடன் 2 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் இன்று(செப். 18) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

11 விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, இறுதியாக சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு பின் 2 டன் மலர்களால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு உள்ளது. புலியகுளம் விநாயகர் சிலை, ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும். 19 அடி உயரத்தில், பத்து அடி அகலத்தில் 190 டன் எடை கொண்டது இந்த விநாயகர் சிலை. 

சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய விநாயகரை ஏராளமான பொது மக்கள் நீண்ட நேரம் காத்து இருந்து வழிபட்டு சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புறநகர் பகுதியில் ஆயிரத்து 611 விநாயகர் சிலைகளும், மாநகர் பகுதிகளில் 680 சிலைகள் உட்பட 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவை மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details