தமிழ்நாடு

tamil nadu

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு!

By

Published : Jul 12, 2023, 6:59 AM IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Vembakottai excavations male figure clay doll has been found
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த ஆண் உருவ சுடுமண் பொம்மை

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. தலை அலங்காரத்துடன் உதட்டு சிரிப்போடு, கயல் வடிவ கண்களோடு இந்த பொம்மை அமைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த அகழாய்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுற்ற நிலையில், அங்கு பல்வேறு வகையான தொல் பொருட்கள் குறிப்பாக, அதிக அளவிலான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.

மேலும், பாசிமணிகள், வளையல்கள், மோதிரங்கள் என 3 ஆயிரத்திற்கும் மேலான பழம் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் வெம்பக்கோட்டையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன புகைப்பிடிப்பான், எடை கற்கள், கண்ணாடி மணிகள் மற்றும் இரும்பு பொருட்கள் என கிடைத்துள்ளன. அந்த வகையில், தற்போது சுடுமண்ணாலான ஆண் உருவ பொம்மை ஒன்று கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொழில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், “ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும், அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டு உள்ளன.

இவ்வுருவம் 2.28 சென்டி மீட்டர் உயரமும், 2.15 சென்டி மீட்டர் அகலமும், 1.79 சென்டி மீட்டர் தடிமனும் கொண்டு உள்ளது. அகழாய்வுக் குழியில் 40 சென்டி மீட்டர் ஆழத்தில் கிடைக்கப் பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்று காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது” என குறிப்பிட்டு உள்ளார். இது போன்ற பொம்மை உருவம் கீழடியில் ஓராண்டிற்கு முன்பு கிடைத்தது. அது சரிந்த கொண்டையுடன் கூடிய பெண் உருவம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் வியக்க வைக்கும் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைத்து வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள ஆண் உருவ சிற்பம் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அகழாய்வில், மேலும் பல்வேறு தொல்லியல் அடையாளங்கள் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பொற்பனைக்கோட்டை அகழாய்வில் பொன் அணிகலன்கள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details