தமிழ்நாடு

tamil nadu

'பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' - எவரெஸ்ட் மலை ஏறி சாதனைப் படைத்த பெண்!

By

Published : Aug 9, 2023, 10:10 PM IST

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலைத்தொடர்களையே ஏறி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

Etv Bharat எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த பெண்
Etv Bharat எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த பெண்

எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த பெண்

சென்னை:விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது பெண்மணி, முத்தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் வசித்து வருகின்றனர். முத்தமிழ்ச்செல்வி ஜப்பான் மொழி பயிற்று விற்பாளராக இருந்து வந்தார்.

மேலும் முத்தமிழ்ச்செல்வி சிறு வயதிலிருந்து விளையாட்டுத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்து பல்வேறு விளையாட்டில் முயற்சிகள் செய்துள்ளார். மேலும், இவர் குதிரை மீது அமர்ந்துகொண்டு, தொடர்ந்து அம்பு எய்தி கின்னஸ் சாதனை செய்துள்ளார். பின்னர் திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்த பிறகும், நாம் சாதித்தே ஆக வேண்டும் என எண்ணி வந்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

தொடர்ந்து முத்தமிழ்ச்செல்வி மலைகளில் ஏறி சாதனைப் படைக்க தொடர்ந்து இரண்டு வருடங்களாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதில், சிறிய சிறிய மலைகளில் கண்களை மூடியவாறு மலையில் ஏறியும், இறங்கியும் பயிற்சிகளை எடுத்து வந்துள்ளார்.

பின்னர் ஆசிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். ஆனால், முத்தமிழ்ச்செல்விக்கு பொருளாதார வசதி இல்லாததால் அதற்கான உதவியை தமிழ்நாடு அரசிடம் கோரியிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ்ச்செல்வியை நேரில் அழைத்து 10 லட்சம் ரூபாய் அரசு சார்பில் உதவி வழங்கினார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 லட்சம் ரூபாய் தன் சார்பாக கொடுத்து உதவினார்.

பின்னர் எவரெஸ்ட் போன்ற மிகப்பெரிய மலைகளை ஏற வேண்டும் என்றால், அதற்கு குறைந்தது 5ஆயிரம் அடி மலைத்தொடர்களை ஏறி கடந்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே எவரெஸ்ட் போன்ற மிகப்பெரிய மலைத்தொடர்கள் ஏறுவதற்கு அனுமதி பெற முடியும். பிறகு லடாக்கில் உள்ள 5 ஆயிரம் அடி மலைத் தொடரை ஏறி அதற்கான அனுமதியும் முத்தமிழ்ச்செல்வி பெற்று இருந்தார்.

இதையடுத்து முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் மலை பயணமாக 56 நாள்கள் ஏறி, கடந்த மே மாதம் 23ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் அடைந்து சாதனைப் படைத்தார். அதேபோல் இரண்டாவது சாதனையாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலைத்தொடரான மவுண்ட் எலபரஸ்ட் என்கிற மலையை 10 நாள்கள் பயணமாக மேற்கொண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி 18ஆயிரத்து 510 மீட்டர் கொண்ட மலைத்தொடரை ஏறி சாதனைப் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய மலைத்தொடரான மவுண்ட் எலபரஸ்ட் என்ற சிகரத்தை ஏறிய முதல் பெண் ஆக முத்தமிழ்ச்செல்வி சாதனைப் படைத்தார். தொடர்ந்து உலகத்தில் மீதம் உள்ள 5 கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலைத்தொடரில் ஏறி சாதனைப் படைக்க வேண்டும் என குறிக்கோளாக தொடர்ந்து பயிற்சிகளை முத்தமிழ்ச்செல்வி எடுத்துக் கொண்டு வருகிறார்.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது, “சிறிய வயதில் இருந்து விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததே தற்போது நான் எவரெஸ்ட் போன்ற மிகப்பெரிய மலைத்தொடரில் ஏறி சாதனை படைக்க காரணமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்ததால் என்னால் விளையாட்டில் எந்த ஒரு சாதனையும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு என்னுடைய சூழ்நிலைகளை புரிந்து எனது கணவர் மற்றும் குடும்பத்தார் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

கடுமையான இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு 56 நாள்கள் பயணம் மேற்கொண்டு எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்தேன். தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்ணாக எவரெஸ்ட் உச்சியை அடைந்து நான் சாதனைப் படைத்தேன். அதேபோல் ஐரோப்பா கண்டத்தில் உள்ள மவுண்ட் எலபரஸ்ட் மிகப்பெரிய மலைத்தொடரை பத்து நாள்கள் பயணமாக ஏறி சாதனைப் படைத்துள்ளேன். இரண்டு எவரெஸ்ட் மலையேறும்போது பல்வேறு இன்னல்களை அனுபவித்தேன். இருந்தாலும் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கடுமையாக முயன்று ஏறி சாதனைப் படைத்தேன்.

மிக உயரிய மலைகளை ஏறுவது என்பது அவ்வளவு சுலபமானது கிடையாது. உயிரைப் பணயம் வைத்து தான் இது போன்ற சாதனை மைல்கல்லை எட்டுகின்றோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மலை ஏற்றத்திற்கு சரியான விழிப்புணர்வு அதிகளவில் இல்லை. தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்தால் அதிக அளவில் மலைகளை ஏறும் வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும்.

எனது குறிக்கோள், உலகில் உள்ள ஏழு கண்டங்களிலும் மிக உயரிய மலைத்தொடர்களை ஏறி சாதனைப் படைக்க வேண்டும் என்பதுதான். முதல் கட்டமாக ஆசிய கண்டத்தில் உள்ள எவரெஸ்ட் மலைத்தொடரை ஏறி முடித்துள்ளேன். இரண்டாம் கட்டமாக ஐரோப்போ கண்டத்தில் உள்ள மவுண்ட் எலபரஸ்ட் என்கிற மலைத்தொடரை ஏறி முடித்துள்ளேன். மீதமுள்ள ஐந்து கண்டங்களில் உள்ள மிக உயர மலைத்தொடர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சாதனையை நான் கொடுப்பேன்.

அடுத்த கட்டமாக ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ என்கிற மிக உயரிய மலைத்தொடரை அடுத்த மாதம் 10ஆம் தேதி ஏற உள்ளேன். ஏற்கனவே இந்தியாவில் வட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இது போன்று மலைகளை ஏறி சாதனைப் படைத்துள்ளார்கள், தமிழ்நாட்டில் இருந்து நானே முதல் பெண்ணாக இருக்கிறேன்.

பெண்களைப் பொறுத்தவரை முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி இருந்தால் எதையும் சாத்தியப்படுத்த முடியும். நான் தொடர்ந்து முயற்சி செய்து இரண்டு கண்டங்களில் உள்ள மிக உயர்ந்த மலையை தொடர்களை ஏறி சாதனைப் படைத்துள்ளேன்.

பெண்களுக்கு அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் சாதிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகத் திறமைகள் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். பெண்கள் நிச்சயம் திறமைகளை வெளிப்படுத்தி சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும். என்னை பார்த்து பெண்கள் அவரவர்கள் துறையில் முயற்சி செய்து சாதனைப் படைத்தால் அதுதான் என்னுடைய வெற்றி” என்றார்.

இதையும் படிங்க:அகமதாபாத் டூ லண்டன்: விண்டேஜ் காரில் சுற்றுப்பயணம் செய்து உருவாகும் ஆவணப்படம்

ABOUT THE AUTHOR

...view details