தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் இருவர் பலி

By

Published : Sep 30, 2019, 11:06 AM IST

விழுப்புரம்: செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்த விபத்தில், இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகனம் வெடித்து

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து சென்னை - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று, காலை 8 மணி அளவில் வடவனூர் என்ற இடத்தில், சாலையோர பஞ்சர் கடையில் நின்றது. சரக்கு வாகனத்தில் இருந்து இறங்கிய ஓட்டுநர், ரேடியேட்டர் பழுதடைந்து புகை கிளம்புவதால், தண்ணீர் கொடுக்குமாறு பஞ்சர் கடை உரிமையாளர் ஜனார்தனன் என்பவரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஆட்டோவின் பின்புறத்தில் தீப்பற்றி எரிவதை ஜனார்தனன் பார்த்துள்ளார். என்ன சரக்கு என்று கேட்ட போது பட்டாசு என்று ஓட்டுநர் கூறவே, பஞ்சர் கடை உரிமையாளரான ஜனார்தனன், தனது இருசக்கர வாகனத்தை சிறிது தூரத்தில் பாதுகாப்பாக வைப்பதற்காக எடுத்துச் சென்ற போது பட்டாசு வெடித்துச் சிதறியது.

வெடிவிபத்து நடந்த இடத்தில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டம்

பட்டாசுகள் வெடித்ததில் சரக்கு வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. பட்டாசு வெடிப்பின் தாக்கத்தால், அரை கிலோ மீட்டர் தூரம் வரை இருந்த கடைகள், வீடுகளில் கதவு ஜன்னல்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கின. அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி உடைந்தது. தேநீர் கடை ஒன்று முற்றிலும் சிதைந்தது.
இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடிப்பு நிகழ்வதற்கு முன்னர் சிலரும், அதன் பிறகு சிலரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சிலரை காணவில்லை என்றும் அவர்களின் நிலைமை என்ன என்பதும் மர்மமாகவே உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

வெடித்துச் சிதறிய வெடிகளில் வீராசாமி பயர் ஒர்க்ஸ், புதுச்சேரி அடியாள் என்று அச்சிடப்பட்டுள்ள காரணத்தாலும், சரக்கு வாகனத்தின் பதிவெண் புதுச்சேரி என்று இருந்ததாகக் கூறப்படுவதாலும், அங்கிருந்து பட்டாசுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனம் வெடித்து சிதறிய இடத்தில் சூழ்ந்திருக்கும் பொதுமக்கள்

இந்த விபத்து குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு வாகனம் சுக்கு நூறானதால், அந்த வாகனம் யாருக்குச் சொந்தம் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details