தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கின் மத்தியில் மாணவர்கள் நலனுக்காக பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்

By

Published : Jun 19, 2020, 4:13 PM IST

Updated : Jun 21, 2020, 11:40 AM IST

மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், மாணவர்களின் கல்வி குறித்த கவலை பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனிடையே மீண்டும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றால் அவர்களுக்கு கற்றது ஞாபகம் இருக்குமா என்பது மற்றொரு கேள்விகுறியாக உள்ளது. இந்ந நிலையில் மாணவர்கள் சிரமம் இல்லாமல் கல்வி கற்கவும் கற்றதை நினைவில் கொள்ளவும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேமா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அது குறித்த செய்தி தொகுப்பு இதோ...

school teacher comes with teaching learning method for students
school teacher comes with teaching learning method for students

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் என்.கே.ஹேமலதா. கடந்த 1992ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பாடசாலையில் தனது ஆசிரியை பணியை தொடங்கிய இவர், வெற்றிக்கரமாக 28 ஆண்டுகளைக் கடந்து தற்போது அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தன்னிடம் பயிலும் மாணவர்களை 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்துள்ளார். இதற்காக 2004, 2005 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் 'சிறந்த ஆசிரியருக்கான' விருதைப் பெற்றுள்ளார். இதேபோல் 2019 - 2020ஆம் ஆண்டுக்கான 'புதுமை ஆசிரியர்' விருதையும் இவர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் பெற்றார்.

மாணவர்களின் நலனுக்காக பாடுபடம் ஆசிரியை

தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ஆசிரியையாக ஹேமா விளங்குகிறார். இந்நிலையில், இந்த கரோனா விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தனது சொந்தச் செலவில் கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை செய்து இவர் அசத்தியுள்ளார்.

இதற்காக அதிகம் செலவில்லாமல் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களான திருமணப் பத்திரிக்கைகள், அட்டைகள், குச்சிகள், பழைய குறுந்தகடுகள், வண்ணக் காகிதங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பொம்மை, இதயம், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட வடிவிலான பல்வேறு கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.

இதற்காக தனது மகன் கபிலன், மருமகள் வினோதனி ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்டக் கல்வி அலுவலர் முனுசாமி ஆகியோர் இதற்காக தனக்கு முழு ஊக்கம் அளிப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் ஹேமா. தற்போது கரோனா விடுமுறையால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது மறந்திருக்கும் பாடங்களை மறுபடி நினைவூட்ட இந்த கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹேமா.

இந்தக் கற்றல் உபகரணங்கள் மூலம் தமிழ் இலக்கியங்களை எளிமையாகக் கற்பிக்க முடியும் என்றும், மாணவர்கள் பாடங்களை எளிமையாக மனப்பாடம் செய்ய முடியும் எனவும், பெரிய கேள்விக்கான விடையை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்வது போன்று மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த உபகரணங்கள் பயன்படும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆசிரியை ஹேமலதா.

இதில், மாணவர்களின் கற்றல் அறிவை மேம்படுத்தும் விதமாக ஐந்து வகை நிலங்கள், அவற்றில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் வகையில் தனித்தனியாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், பழங்கால நாணயங்கள், உள்நாட்டு- வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், நாணயங்களை சேகரித்து வைத்து, சிறிய அளவிலான மரச் செக்குகள், மண் வெட்டிகள், கலப்பைகள் உள்ளிட்டவைகளை வடிவமைத்துள்ள ஹேமா, இவை அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் உருவாக்கியுள்ளார்.

முக்கியமான அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், அவர்களின் பிறந்த நாள், முக்கிய தினங்கள் உள்ளிட்டவற்றைக் குறிக்கும் ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்து, அதன் மூலம் மாணவர்களுக்கு சேமிப்புப் பழக்கம் உருவாக்கவும் ஹேமா முயற்சித்து வருகிறார். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஆசிரியை ஹேமலதா உருவாக்கியுள்ள இந்த கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் கண்டிப்பாக அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இதையும் படிங்க... சுகாதாரமற்று செயல்படும் அரசு சிறப்பு கரோனா மருத்துவமனை!

Last Updated : Jun 21, 2020, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details