தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிப்பா? ரயில்வே கேட் எச்சரிக்கை பலகையில் தமிழ் மொழி அகற்றம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 4:20 PM IST

Neglect of Tamil language: விழுப்புரம் அருகே ரயில்வே கேட்டில் உள்ள எச்சரிக்கை பலகையில் தமிழ் மொழி புறக் கணிக்கப்பட்டதற்குப் பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

public against over neglection of tamil language from warning sign at villupuram railway gate
விழுப்புரம் ரயில்வே கேட்டில் உள்ள் எச்சரிக்கை பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம்:விழுப்புரம் - வேலூர் இடையேயான ரயில்வே இருப்புப் பாதையில், விழுப்புரம் வண்டி மேடு - கே.வி.ஆர் நகர் செல்லக்கூடிய அந்த சாலையின் இடையே, ரயில்வே கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ரயில்வே கேட் சில தினங்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டது.

கேட் போடும்போது, கேட் கம்பத்தில் இருபுறமும் உள்ள எச்சரிக்கை பலகையில் நில் என்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன. ஆனால், தற்போது புனரமைக்கப்பட்ட ரயில்வே கேட்டில் உள்ள எச்சரிகை பலகையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது முன்பு எழுதப்பட்டிருந்த நில் என்ற தமிழ் வார்த்தைக்குப் பதிலாக, தெலுங்கில் நில் என எழுதப்பட்டுள்ளது.

தமிழ் வார்த்தை எச்சரிக்கை பலகையிலிருந்து அகற்றப்பட்டு ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நில் என எழுதப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மத்திய அரசின் ரயில்வே துறையின் இத்தகைய செயலுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அதோடு, அங்கு உடனடியாக தமிழில் எழுத வேண்டும் எனக் கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்த எதிர்ப்பின் அடிப்படையில், ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வந்து தெலுங்கில் எழுதப்பட்டிருந்த வார்த்தை மேல் அவசர அவசரமாக பேப்பரில் நில் என்று தமிழில் எழுதி ஒட்டியுள்ளனர்.

அதன் பின்னர், இதனைக் கண்டு முழுவதுமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவதற்கு முன்னரே, சிறிது நேரத்தில் அந்த பலகை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், எச்சரிக்கை பலகையை அகற்றியதற்கான காரணம் தெரிவிக்கப்படாததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தமிழ் மொழி அகற்றப்படும் இச்செயல் முற்றிலுமாக கண்டிக்கத்தக்கது என தற்போது பல்வேறு விமர்சனக் கருத்துக்களும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க:குருப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

ABOUT THE AUTHOR

...view details