தமிழ்நாடு

tamil nadu

மிரட்டும் மிக்ஜாம் புயல்: விழுப்புரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:32 PM IST

மிக்ஜாம் புயல் அச்சுறுத்தி வரும் வேளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மழை நிவாரண முகாம்களில் உள்ளவர்களை அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு

விழுப்புரம்:மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கொட்டும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உடனடியாக விரைந்து முன்னெச்சரிகை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் 'மிக்ஜாம் புயல்' முன்னிட்டு வானூர் மற்றும் மரக்காணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறுகையில், "வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக டிச.3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதுடன், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர், காணொளி மூலம் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, முன்னேற்பாடுகள் தொடர்பாக அறிவுறுத்தினார். இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கடற்கரையோர பகுதிகளான மரக்காணம் மற்றும் வானூர் வட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்துத்துறை அலுவலர்களும் இப்பகுதிகளில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

மேலும் வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் சித்தர் சிவஞானம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 நபர்கள் அடங்கிய ஒரு பேரிடர் மீட்புப்படை குழுவினரும், மரக்காணம் வட்டம், தெற்கு கிராமம் ஜி.டி.எஸ் திருமண மண்டபத்தில் 25 நபர்கள் அடங்கிய ஒரு பேரிடர் மீட்புப்படை குழுவினர் தங்க வைக்கப்பட்டு, பேரிடர் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும், தாழ்வான பகுதியில் வசிப்போரை மீட்டு பாதுகாப்பாக தங்கவைக்க வானூர் வட்டத்தில் 3 மையங்களும், மரக்காணம் வட்டத்தில் 9 மையங்கள் என மொத்தம் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையங்களில் 9,500 நபர்களை பாதுகாப்பாக தங்க வைத்திடலாம்.

தந்திராயன் குப்பம், சின்னமுதலியார்சாவடி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்ததுடன், தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்துகொடுக்கப்படும் எனவும், கனமழை பெய்யக்கூடும் என்பதால் அனைவரும் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் பிஸ்கட்கள் ஆகியவை வழங்கப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அஅமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், "மரக்காணம் வட்டம், அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில், தாழ்வான பகுதியில் குடியிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, பால், குடிநீர், பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தோம். மேலும், மழையின் தாக்கம் முற்றிலும் குறைந்தவுடன், மாவட்ட நிர்வாகம் அறிவித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிக்கு செல்லலாம் எனவும், அதுவரை முகாம்களில் பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு" அறிவுறுத்தினார்.

தற்போது, மரக்காணத்தில் உள்ள 1 நிவாரண முகாமில் 53 நபர்களும், திண்டிவனத்தில் உள்ள 1 நிவாரண முகாமில் 22 நபர்கள் என மொத்தம் 75 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உண உணவு, பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடந்த இந்த ஆய்வின்போது, விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி, விழுப்புரம் எம்எல்ஏ ரா.இலட்சுமணன் உள்ளிட்டப் பலரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கு : விஜயின் மாமியார் கைது - ஆணையம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details