தமிழ்நாடு

tamil nadu

"ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக " எடப்பாடி பழனிச்சாமி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 8:30 AM IST

Edappadi K Palaniswami: ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக என்று விழுப்புரத்தில் நடைபெற்ற மனிதம் காப்போம் மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
மனிதம் காப்போம் மாநாடு

விழுப்புரம்: புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், “மனிதம் காப்போம் மாநாடு” விழுப்புரத்தில் நேற்று (டிச.20) மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “2024 நாடாளுமன்றத் தேர்தலின் ஒரு முன்னோட்டமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அ.தி.மு.க தலைமையில் பல கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வரவுள்ளன. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக. திமுக கூட்டணி சுயநலவாதிகளுக்கான கூட்டணி. ஆனால், அதிமுக பொது நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் இருந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. ஆனால், திமுகவின் வாரிசு அரசியலை மக்கள் அறிவார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்தினார். கல்வி கற்கும் முக்கியத்துவத்தை அறிந்த ஜெயலலிதா ஆட்சியில், விலையில்லா புத்தகம், சைக்கிள்கள் மற்றும் 52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

ஆனால், 520 திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்ட திமுக அரசு, ஒரு சில திட்டங்களை நிறைவேற்றிவிட்டு, அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது போல நாடகமாடுகிறார்கள். ஏழை மக்களுக்கு உதவிடும் திட்டத்தில் ஊழல் செய்த கட்சி திமுக. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்வது உறுதி” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாநாட்டில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசியதாவது, “சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்திலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திமுக அரசு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் உணவு, நிதி வழங்கி வருகிறது. இதனால் திமுகவிற்கு வாக்களித்து, வெற்றி பெறச் செய்து தவறு செய்து விட்டதாக மக்கள் உணருகிறார்கள்.

மேலும், மு.க.ஸ்டாலின் ஆட்சி இதுவரை விடியல் கொடுக்கவில்லை. காலிப்பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் என வாக்குறுதிகள் நீண்டு கொண்டே போகிறது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக செயல்படுகிறார். சென்னையில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது என தெரிவித்த நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளநீர் அப்பகுதிகளில் சூழ்ந்துள்ளது. தி.மு.கவில் ஜனநாயகம் இல்லை, எனவே திமுக ஆட்சிக்கு வந்தால் சாதிச் சண்டைகள் மற்றும் சாராய சாவுகள் அதிகரிக்கும்” என கூறினார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் எம்.பி.,கனிமொழியின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details