தமிழ்நாடு

tamil nadu

திமுக இளைஞர் அணி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் - அமைச்சர் பொன்முடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 4:27 PM IST

DMK Youth Conference: சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு

விழுப்புரம்:சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி, தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி இருசக்கர வாகன பேரணி ஒன்றை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பரப்புரை 13 நாட்கள் நடைபெற்றது. இந்த பயணத்தின்போது 3 லட்சம் இளைஞர்களை உதயநிதி நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் தொடங்கப்பட்ட இந்த சுடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்திற்கு நாளை சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இளைஞர் அணி மாநாட்டுச் சுடர் விழுப்புரம் வந்தடைந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுச் சுடரை பொன்முடி கையில் ஏந்தி பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொன்முடி தெரிவிக்கையில், தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும்போது, திமுக இளைஞரணி முதல் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக இருக்கும்பொழுது, இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு நடக்க உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பொன்முடி, சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பொதுக் குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு மீண்டும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details