தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Jul 27, 2023, 10:51 AM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், சமூக காடு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வேலூர்:வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, “தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இல்லாததால் அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலன் கருதி தோட்டக்கலை பயிர் சாகுபடி விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். அகரம்சேரி பகுதியில் சமூக காடு அமைக்க அங்கு பாலாற்றின் கரையோரம் உள்ள 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு சமூக காடு அமைத்திட ஆக்கிரமிப்பாளர்கள் இடையூறு செய்து வருகின்றனர். அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சமூக காடு அமைக்கவும், அங்கு ஏற்கனவே உள்ள 200க்கும் மேற்பட்ட மரங்களுக்கு எண்கள் அளிக்கவும் வேண்டும்.

இதேபோல், அகரம் ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்திலும் சமூக காடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமரன் மலையடிவாரத்திலிருந்து பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க தென்னைகள் இறக்கி விற்பதற்கு அனுமதி அளித்திட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் தக்காளி விலை அதிகரிக்கும்போது கூக்குரலிடும் பொதுமக்கள், தக்காளி விலை வீழ்ச்சியடையும் சமயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க பேசுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

அதேநேரம், தக்காளி விலை வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தரமான விதைகளை வழங்கவும், அவற்றை எந்தந்த பருவத்தில் விதைக்க வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தென்னை குட்டை, நெட்டை ரகங்களை கன்றுகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இயற்கை வேளாண் விவசாயத்துக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா விளைச்சல் நடைபெறுகிறது. இங்கு விளையும் மாங்காய்களை ஆந்திர மாநில மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்றால் தரமில்லை எனக்கூறி சுமார் 15 சதவீதம் அளவுக்கு கழிவு செய்யப்படுகிறது.

இந்த பாதிப்புகளை தவிர்க்க தரமான மருந்துகளை வழங்கவும், வேலூர் மாவட்டத்திலேயே கூட்டுறவு மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களில் வனவிலங்குகளால் பயிர்சேதம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடுகத்தூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிககளில் கடன் பெறும் விவசாயிகளிடம் 20 முதல் 25 சதவீத அளவுக்கு உரங்கள் வாங்க நிர்பந்தம் செய்யப்படுகிறது. அதேநேரம், அங்கு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் இருப்பதில்லை. இதனால், அதிகமாக உரங்கள் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உரங்கள் வாங்கக்கூறி விவசாயிகளை நிர்ப்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும்.

அரியூரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறந்து வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். அந்த நூற்பாலையில் பணிபுரிந்து தற்போது வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்அரசம்பட்டில் அணை கட்ட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வங்கிகளில் 7 சதவீத வட்டியில் அளிக்கப்படும் விவசாய நகைக் கடன் வழங்கப்படுவதில்லை.

இதனை முறைப்படுத்தி விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் நகைக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான கரும்பு அலுவலர்கள் கரும்புகளை முறையாக பதிவு செய்வதில்லை. முறையாக கரும்புகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் 1000 மாட்டு வண்டிகள் உள்ளன. அந்த தொழிலாளர்களின் நலன்கருதி மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரி அமைத்துத்தர வேண்டும்.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் விதைப்புப் பயிர் நடைபெற அடுத்த 30 நாட்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கே.ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details